திருச்செந்தூர்: திருச்செந்தூர் பகுதியில் அதிகாலை முதல் பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கொட்டும் மழையிலும் நனைந்தபடியே பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். சிவன் கோயில் உள்ளேயும் மழைநீர் புகுந்தது. வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் தென் மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் பகுதியிலும் கடந்த 2 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதையடுத்து நேற்று முதல் இன்று காலை வரை மாவட்டத்திலே அதிகபட்சமாக திருச்செந்தூரில் 61.5 மி.மீட்டரும், காயல்பட்டினத்தில் 43 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதனால் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, சபாபதிபுரம் தெரு சந்திப்பு, தினசரி சந்தை, பகத்சிங் பேருந்துநிலையப் பகுதியில் மழை நீரானது குளம் போல் தேங்கியது. பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். திருச்செந்தூர் சிவன் கோயிலில் மழைநீர் உள்ளே புகுந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொட்டும் மழையிலும் நனைந்தபடியே வந்து பக்தர்கள் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
The post திருச்செந்தூரில் கொட்டும் மழையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்: சிவன் கோயிலில் மழைநீர் புகுந்தது appeared first on Dinakaran.