×
Saravana Stores

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா; நவ 24ம் தேதி நடைபெறுகிறது

கோவை: ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் பிரம்மாண்ட பயிற்சி மற்றும் கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில் நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருநெல்வேலி பிரஸ் கிளப்-இல் இன்று (நவ-21) நடைப்பெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா பங்கேற்றுப் பேசினார். இந்த சந்திப்பின் போது திருநெல்வேலி இயற்கை விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் ரைஸ்யா, பொருளாளர் அனுசுயா மற்றும் முன்னோடி வாழை விவசாயி முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் சுவாமி ஶ்ரீமுகா பேசியதாவது,
“ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது நாம் உண்ணும் உணவு. இரசாயன விவசாயத்தால் விளைவித்த காய்கறிகளை உட்கொள்ளும் சூழல் உள்ளது. இரசாயனங்கள் எனும் நஞ்சு தெளித்த உணவை நாம் உண்ணும் போது அது விஷமாகி பல நோய்களை நமக்கு தருகிறது.

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வது மற்றும் எவ்வாறு இயற்கை விவசாயத்தில் நல்ல வருவாய் ஈட்டுவது என்பது குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கத்திலும் மண் காப்போம் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்காக தொடர்ந்து பல பயிற்சி கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக இருக்கிறது. மேலும் பல விவசாயிகள் வாழை விவசாயம் என்பது வாழை சாகுபடியோடு நின்று விடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் வாழையில் அதன் அனைத்து பாகங்களையும் மதிப்பு கூட்ட முடியும். இவ்வாறு மதிப்பு கூட்டுவதன் மூலம் சிறு விவசாயிகள் கூட தொழில் முனைவோர்கள் ஆக முடியும். இதை குறித்து பேசவும், வழிகாட்டவும் பல முன்னோடி விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளனர்.

குறிப்பாக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் இ.ரா. செல்வராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றவுள்ளார். மேலும், வாழையில் நுனி முதல் அடி வரையில் அனைத்திலும் மதிப்பு கூட்டல் செய்ய முடியும் என்ற தலைப்பில் முன்னோடி விவசாயி சியாமளா குணசேகரன் பேசவுள்ளார். அவரோடு ஒரு ஏக்கர் இலை வாழையில் ஆண்டுக்கு 20 இலட்சம் ஈட்டும் முன்னோடி விவசாயி சீனிவாசன் மற்றும் வாழை நார் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில் வருடத்திற்கு பல லட்சங்கள் வருவாய் ஈட்டுவது குறித்து ஜோதி பனானா பைபர் யூனிட் நிறுவனர் ராஜா பேசவுள்ளார்.

இவர்களோடு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் ( ICAR-NRCB) முதன்மை விஞ்ஞானிகளான சி. கற்பகம், ப. சுரேஷ்குமார், க.ஜே. ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோரும், மேலும் பல முன்னோடி விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகளாக வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட 50-க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் மற்றும் வாழை நாரால் ஆன 150-க்கும் மேற்பட்ட கைவினை பொருட்கள் விற்பனைக்கும் கண்காட்சிக்கும் வைக்கப்பட உள்ளன. மேலும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட சிறுதானிய திண்பண்டங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்படுகிறது.

மேலும் வாழை விவசாயத்திலும், வாழையிலிருந்து பெறப்படும் மதிப்பு கூட்டல் பொருட்களில் சாதனைப் படைத்திருக்கும் விவசாயி, தொழில் முனைவோர் உள்ளிட்ட மூவருக்கு இந்த விழாவில் “மண் காப்போம் – சிறந்த வாழை விவசாயி” விருதுகள் வழங்கப்பட உள்ளன.

நஞ்சில்லா இயற்கை விவசாயம் மூலம் வாழை விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777, என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.” இவ்வாறு அவர் பேசினார்.

The post ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா; நவ 24ம் தேதி நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Banana Festival ,Paddy ,Isha Man Kappom ,Coimbatore ,Isha Man Kappom Movement ,Vazh Paasa Banazai ,Scott College ,Cheranmahadevi, Tirunelveli District ,Tirunelveli… ,Nellai Banana Festival ,
× RELATED நெல்லை – நாகர்கோவில் நெடுஞ்சாலையோரம் இருந்த பழமையான ஆலமரம் முறிந்தது