×
Saravana Stores

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டி ஈன்றது: சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டி ஈன்றது. இதனை சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக்கான தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்து சொல்வது வழக்கம். இந்த பூங்காவில் 5 பெண் நீர்யானைகளும், 2 ஆண் நீர் யானைகளும் என மொத்தம் 7 நீர் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரக்ஷ்குர்தி என்ற பெண் நீர்யானை 8 மாதம் கர்ப்பமாக இருந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி குட்டியானையை ஈன்றது. அப்போது தாயும், குட்டியும் தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் பிறந்த 8வது நாளில் குட்டி மர்மமான முறையில் இறந்தது. இதனால் நீர்யானை கூண்டு மற்றும் உலாவிடம் பார்வையாளர்களுக்கு அனுமதிக்காமல் மூடி வைக்கப்பட்டன. இந்நிலையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மற்றொரு பெண் நீர்யானை நேற்று முன்தினம் ஒரு குட்டி நீர்யானையை ஈன்றது. இதனை பூங்கா நிர்வாகத்தினர் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து பூங்கா நிர்வாகத்திடம் கேட்டதற்கு பதில் கூற மறுத்து விட்டனர்.

* பூங்கா உதவி இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வன விலங்குகள், பறவைகள் மற்றும் முதலைகள் அடிக்கடி தப்பி செல்வதும், மர்மமான முறையில் இறந்து வருவதும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் பூங்காவின் உதவி இயக்குனர் மணிகண்டபிரபுவை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த உதவியை இயக்குனர்கள் சரியான முறையில் பதில் கூறுவது உண்டு. ஆனால் தற்போது பணியாற்றி வரும் உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு விலங்கு, பறவைகளின் பிறப்பு, இறப்பு குறித்து தகவல்கள் வெளியே செல்லக்கூடாது என்றும், மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பூங்கா பராமரிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பூங்காவின் நடக்கும் உண்மை சம்பவங்களை மூடி மறைப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு எழும்பி உள்ளது. எனவே, பூங்காவின் உதவி இயக்குனர் மணிகண்ட பிரபுவை தமிழக அரசு உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டி ஈன்றது: சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Vandalur Arinjar Anna Zoo ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில்...