புது டெல்லி: இஸ்ரோ தயாரித்த ஜிசாட் என்2 செயற்கைக்கோள். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் மூலம் வடகிழக்கு இந்தியா மற்றும் விமானங்களில் அதிவேக இணைய சேவை பெறலாம். இந்திய விண்வெளி ஆய்வுநிறுவனம்(இஸ்ரோ) 4.700 கிலோ எடை கொண்ட ஜிசாட்-என்.2 என்ற தொலைதொடர்பு செயற்கைக்கோளை தயாரித்தது. இந்தியாவுக்கு சொந்தமான எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் அதிக பட்சமாக 4,000கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே ஏவமுடியும். இதனால், ஜிசாட் என்2 செயற்கைக்கோளை வெளிநாட்டு உதவியுடன் விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்தது. வழக்கமாக இந்தியாவுக்கு கைகொடுக்கும், ஐரோப்பாவின் ஏரியான் நிறுவனத்தை இஸ்ரோ நாடியது. ஆனால், அடுத்தடுத்த ராக்கெட் ஏவுதல்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக ஏரியான் நிறுவனம் கைவிரித்தது. செயற்கைகோளை ஏவ நீண்டநாள் காத்திருக்க முடியாது என்பதால் அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரரான டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை இஸ்ரோ நாடியது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஜிசாட் என் 2 செயற்கைகோளை ஏவ ஒப்புக்கொண்டது. அதன்படி. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவரல் ஏவுதளத்தில் இருந்து. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட். மூலம் ஜிசாட்-என்2 செயற்கைக்கோள் நேற்று காலை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 14 ஆண்டுகள் ஆகும். இதை தயாரிக்க ரூ.500 முதல் ரூ. 600 கோடி வரை செலவானதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் உட்பட நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும். இந்த செயற்கைக்கோள் இந்திய விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு இணைய சேவையை கொண்டு வரவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வானில் பறந்தபடி இனி அதிகவேக இணைப்பு மூலம் இணையத்தை பிரவுஸ் செய்யலாம். இதற்காக 32 பயனாளர் பீம்கள் செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ள ஆன்டெனாக்கள் உதவியுடன் இந்தியாவை நோக்கி அனுப்பப்படும்.
The post அமெரிக்காவின் ‘ஸ்பேஸ்- எக்ஸ்’ ராக்கெட் மூலம் இந்தியாவின் ஜிசாட் என்2 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது: விமானத்தில் பறந்தபடி இனி இணைய சேவை பெறலாம் appeared first on Dinakaran.