ரியோ டி ஜெனிரோ: காசா, உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக மனிதாபிமான உதவிகள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜி20 மாநாட்டில் கூட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி20 உச்சி மாநாடு கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்து தலைவர் ஸ்டார்மர் உள்ளிட்ட உலகின் முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட் காரணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பதிலாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் பங்கேற்றார். மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, ஜி20 அமைப்பின் இந்தாண்டு தலைமை பொறுப்பு ஏற்றுள்ள பிரேசிலின் பிரதமர் லூயிஸ் லூலா கூட்டு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதை பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்தன. அர்ஜென்டினா மட்டும் சில விஷயங்களில் முரண்பட்டது.
தீர்மானத்தில், காசா, லெபனான் மற்றும் உக்ரைனில் நிகழும் போர் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. காசாவில் மனிதாபிமான உதவிகளை விரிவுபடுத்த வேண்டும், உடனடி போர் நிறுத்தம் கொண்டு வரவேண்டும், அதிகப்படியான மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான அனைத்து தடைகளையும் நீக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதே போல, லெபனானிலும், உக்ரைனிலும் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பணயக் கைதிகள் குறித்தோ, ரஷ்யாவுக்கு எதிராகவோ எந்த கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை.கூட்டறிக்கையில், பட்டினி, வறுமைக்கு எதிராக போராட உலகளாவிய கூட்டணி தொடங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களுக்கு 2 சதவீத வரி விதிக்க தீர்மானத்தில் பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள 3,000 கோடீஸ்வரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உக்ரைனில் போரை நிறுத்த வலியுறுத்தல் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி: ஜி20 மாநாட்டில் கூட்டு தீர்மானம் appeared first on Dinakaran.