×
Saravana Stores

தூக்கு தண்டனை குற்றவாளி பல்வந்த் ரஜோனாவின் கருணை மனு மீது 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் :உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி : தூக்கு தண்டனை குற்றவாளி பல்வந்த் ரஜோனாவின் கருணை மனு மீது 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி பியாந்த்சிங் உட்பட 16 பேர் தற்கொலைப்படை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். பப்பர் கல்சா எனும் சீக்கியர் தனி நாடு கோரும் அமைப்பு இத்தாக்குதலை நடத்தியது. இதில் மனித வெடிகுண்டாக செயல்பட்டது தில்வார்சிங் என்ற பஞ்சாப் போலீஸ் அதிகாரி. அவருக்கு அடுத்ததாக பஞ்சாப் போலீஸ் கான்ஸ்டபிளான ரஜோனா 2-வது மனித வெடிகுண்டாக தயார் நிலையில் இருந்தார். ரஜோனா மீதான வழக்கில் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி சண்டிகர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. ரஜோனாவை 2012 மார்ச் 31-ல் தூக்கிலிடவும் தேதி குறிக்கப்பட்டது. ஆனால் சீக்கியர் தலைவர்களின் அழுத்தங்களால் ரஜோனா தூக்கிலிடப்படவில்லை.பியாந்த் சிங் படுகொலை வழக்கில் பல்வந்த் ரஜோனாவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த நிலையில், நீண்ட கால தாமதம் ஆகிவிட்டதால் தனது மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வந்த் மனு தாக்கல் செய்துள்ளார். பல்வந்த் ரஜோனாவின் மரண தண்டனையை ரத்துசெய்வதில் ஆட்சேபனை இல்லை என மாநில அரசு கூறிவிட்டது. ஒன்றிய அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. பல்வந்த் ரஜோனாவின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஒன்றிய அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை. வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு இன்று கூடிய நிலையில் ஒன்றிய அரசு சார்பில் எப்படி யாரும் ஆஜராகாமல் இருக்கலாம் என்று நீதிபதி கவாய் கேள்வி எழுப்பினார். அப்போது, மனுதாரர் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,” பல்வந்த் சிங் வழக்கில் இன்று ஆஜராக இது நேரமல்ல என்று ஒன்றிய அரசு கூறுகிறது. பல்வந்த் சிங் இறந்த பிறகு மனு மீது முடிவு எடுப்பார்களா? ,” என கேள்வி எழுப்பினார். இறுதியாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தூக்கு தண்டனை குற்றவாளி பல்வந்த் ரஜோனாவின் கருணை மனு மீது 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும். 2 வாரத்தில் முடிவு எடுக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் வைக்க அவரது செயலாளருக்கு உத்தரவிடுகிறோம். 2 வாரத்துக்குள் ஜனாதிபதி முடிவு எடுத்து அறிவிக்காவிட்டால் நீதிமன்றமே நிவாரணம் அளிக்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தூக்கு தண்டனை குற்றவாளி பல்வந்த் ரஜோனாவின் கருணை மனு மீது 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் :உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Balwant Rajona ,Supreme Court ,Delhi ,Pyeongchang ,Supreme Court Action ,
× RELATED டெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி