சென்னை: தமிழகத்துக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்த நைஜீரிய வாலிபரை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கடந்த மாதம், ஜீவன் (39), மஸ்தான் (45), ஜெகதீசன் (25), சதீஷ்குமார் (33), விஸ்வநாதன் (47), தீபக்ராஜ் (24), சித்தாத் (25), அருள்குமார் (28), அந்தோணிராஜ் (29), சந்தோஷ் (27) மற்றும் நைஜீரியவை சேர்ந்த காண்டே அபித் (38) ஆகிய 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 11 பேரையும் 6 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். பெங்களுருவில் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் யார் என்று விசாரித்தபோது நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் வாட்ஸ்அப் மூலம் எங்களிடம் பேசுவார் என்றும், அவர் பெங்களூருவில் உள்ள ஒரு இடத்துக்கு எங்களை வரவழைத்து போதை பொருட்களை கொடுப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நைஜீரிய வாலிபருடன் போலீசார் தொடர்பு கொண்டு அவசரமாக போதைப்பொருட்கள் வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து உடனடியாக நள்ளிரவில் நைஜீரிய வாலிபர் பெங்களூருக்கு வருவதாக வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினார். இதையடுத்து, அண்ணாநகர் துணை ஆணையர் சினேகா பிரியா உத்தரவின்படி, திருமங்கலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முகமதுசபியுல்லா, அரும்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் பெங்களூரு சென்று அந்த வாலிபரை நேற்று காலை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அந்த நபரை சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தியதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த பிலிப் (31) என தெரிய வந்தது. இவர், நைஜீரியா நாட்டில் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பெங்களுருக்கு சப்ளை செய்துள்ளார். அங்கிருந்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post தமிழகத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நைஜீரிய வாலிபர் கைது: பெங்களூருவில் சுற்றிவளைத்தது தனிப்படை appeared first on Dinakaran.