×
Saravana Stores

சென்னையில் டைடல் பார்க் தொடங்கப்பட்டதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை: பேரவை தலைவர் அப்பாவு பேச்சு

சென்னை: ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் நடைபெற்ற 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். பின்பு, அங்கிருந்து புறப்பட்டு மெல்போர்ன் நகரை சென்றடைந்தார். நேற்று மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்கள் சார்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேரவைத்தலைவர் அப்பாவு கலந்துகொண்டு, பேசியதாவது: கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளில் தமிழை கற்பிக்காமல் போன வரலாறு உண்டு.

ஆனால், இப்போது கட்டாயமாக தமிழை கற்றுக்கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியதன் காரணமாக அங்கெல்லாம் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் எவ்வளவு வேண்டும் என்பதை ‘தமிழர் குடும்பம்’ வாயிலாக எங்களுக்குக கடிதம் மூலம் தெரிவித்தால், உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கல்வியை அனைத்து சாராருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் வரை அனைவரும் எடுத்த முயற்சியின் காரணமாக, தற்போது இந்தியாவிலேயே பட்டப்படிப்பு படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது.

பிரதமர், 2035ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 50 சதவிகிதம் பேர் பட்டம் பயில வேண்டும் என்ற இலக்கோடு புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்திருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே 51 விழுக்காடு பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் 1996ம் ஆண்டுக்கு முன்பு வரை தகவல் தொழில்நுட்ப துறை என்றால் பெங்களூரு மட்டும்தான் என்பது அனைவருக்கும் தெரியும். கலைஞர் முதல்வராகவும், முரசொலி மாறன் மத்திய வர்த்தகத் துறை அமைச்சராகவும் இருந்தபோதுதான், முதன்முதலாக சென்னையில் ‘டைடல் பார்க்’ தொடங்கப்பட்டது. அதன் விளைவாகத்தான், தற்போது ஆண்டிற்கு 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post சென்னையில் டைடல் பார்க் தொடங்கப்பட்டதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை: பேரவை தலைவர் அப்பாவு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tidal Park ,Chennai ,Council President ,Appavu ,Tamil Nadu Assembly ,Speaker ,M. Appavu ,67th Commonwealth Parliamentary Conference ,Sydney, Australia ,Melbourne ,
× RELATED ராசிபுரத்தில் ரூ.35 கோடியில் மினி டைடல் பூங்கா: முதல்கட்ட பணி தொடக்கம்