×
Saravana Stores

சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்புகளை சரிசெய்ய களப்பணியில் 22 ஆயிரம் பேர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: மழை பாதிப்பு குறித்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சியில் 22,000 பேர் களப்பணியில் உள்ளனர் என்றும் ஆய்வுக்கு பின்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், மழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதல் மழை தீவிரமடைந்து வருவதால் சென்னையில் முக்கிய சாலைகளி மழைநீர் தேங்கியது. அவற்றை அகற்றும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைக்கப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நேற்று காலை 7.30 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. சராசரியாக சென்னையில் 3.60 செ.மீ., தென் சென்னையில் சராசரி 5.5 செ.மீ, பெருங்குடியில் 7.35 செ.மீ., மழை பெய்திருக்கிறது. அதேபோன்று, செங்கல்பட்டில் 1.06 செ,மீ., திருவள்ளூரில் 0.6 செ,மீ., காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ., உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டளையின்படி, மாநரகாட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தோம். 1,194 மோட்டார் பம்புகள், 158 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 524 ஜெட் ரோடிங் இயந்திரங்களும் தயாராக உள்ளன. இது அக்டோபர் மாதம் பெய்த மழைக்கு பயன்படுத்தி இருந்ததை விட 21 சதவீதம் அதிகமாக்கி இருக்கிறோம்.

அதேபோல், அக்டோபர் மழை அனுபவத்தின் அடிப்படையில், கண்காணிப்பு அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் மோட்டார்களை அமைத்துள்ளோம். சென்ைன மாநகராட்சி சார்பில், 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. இது, கடந்த அக்டோபர் மாதம் 98 ஆக இருந்தது, அதையும் உயர்த்தியிருக்கின்றோம். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர, மற்ற 21 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து உள்ளது.

ரயில்வே மேம்பால பணிக்காக கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. காலை 9.30 மணி வரை எந்த பகுதியிலும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சென்னை மாநகராட்சி ஆணையர், களபணியாளர்கள், அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி அனைவரும் களத்தில் இருக்கின்றோம்.

மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த அனைத்து விரைவான நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுப்போம். கால்வாய்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முடித்துவிடுவோம். இரண்டு நாட்களுக்கு முன்பாக திருச்சி, மதுரை, தஞ்சாவூர் இங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருந்தது. இப்போதைக்கு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் மட்டும் தான் அதிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இன்னும் செய்திகள் வரவில்லை. சமூக ஊடகங்களில் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதற்கு உடனுக்குடன் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரியளவில் புகார்கள் ஏதும் வரவில்லை. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 22,000 பேர் களப்பணியில் இருக்கின்றனர். மழைநீர் சேகரிப்பிற்காக தான், மழைநீர் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கட்டிடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்புகளை சரிசெய்ய களப்பணியில் 22 ஆயிரம் பேர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Northeast Monsoon ,
× RELATED திமுக கூட்டணி வலுவாக உள்ளது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!