சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழ்நாடு அரசு, 25 ஆண்டு நிறைவுப் பெருவிழாவை கொண்டாட இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காணொலி வாயிலாக அவர் ஆற்றிய உரை.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தமிழ் வணக்கம்!
வடக்கே உள்ள வானுயர்ந்த இமயமலைக்கு நிகராக – தெற்கே குமரிமுனையில் தமிழ்மலையாக வள்ளுவர் சிலையை உருவாக்கினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!
கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 133 அடியில் வானுயர் புகழுக்குச் சாட்சியமாக சிலை அமைத்தார்.
அந்தச் சிலை அமைக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. வெள்ளிவிழா காண்கிறது வள்ளுவனார் சிலை!
அதை கொண்டாடுகின்ற விதமாக 31.12.2024 மற்றும் 01.01.2025 ஆகிய நாட்களில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது!
இந்த உலகத்திற்கே பொதுமறை வழங்கியவர் நம் அய்யன் திருவள்ளுவர். சாதி, மத பேதங்களை கடந்து தமிழினத்தை ஒற்றுமைப்படுத்த திருவள்ளுவர் தந்த “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை வாழ்வியலாக பாமர மக்களின் உள்ளங்களிலும் பதிய வைத்து, உதடுகளை உச்சரிக்க வைத்தது திராவிட இயக்கம்!
ஆனால், அந்த வள்ளுவருக்கே காவிச் சாயம் பூச இன்றைக்கு ஒரு கும்பல் நினைக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் “சமத்துவத்தை வலியுறுத்தியவர் வள்ளுவர்! அவர் எல்லோருக்கும் பொதுவான தமிழர்களின் அடையாளம்”- என்று மீண்டும் முழங்க வேண்டியிருக்கிறது!
திருக்குறளுக்குப் பெருமை சேர்த்து, வெகுமக்களின் வாழ்வியலோடு கலக்க தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தது திராவிட இயக்கம்.திருக்குறள் மாநாடுகளை நடத்தி வள்ளுவத்தை உயர்த்திப் பிடித்தவர் தந்தை பெரியார். “நம் நெறி, குறள் நெறி! நம் மதம், குறள் மதம்!”- என்று சொன்னார் தந்தை பெரியார்.“குறள் வகுப்பறையில் மட்டுமல்லாமல் – உங்கள் இல்லங்களில் மட்டுமல்லாமல் – உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றார் பேரறிஞர் அண்ணா.அத்தகைய குறள் எனும் அறிவுத் திருவிளக்கை, திக்கெட்டும் பரப்புகின்ற பணியை தன்னுடைய ஒப்பற்ற கடமையாக கருதி செயல்பட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், குறள் பரப்புகின்ற ஒரு ஆசானாக வலம் வந்தார், தலைவர் கலைஞர்.
குறளோவியம் தீட்டினார். குறளுக்கு விளக்கவுரை தந்தார். தலைநகரில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார். அரசு அலுவலகங்களிலும், பேருந்துகளிலும் குறளை எழுதவைத்து, குறளை எளிய மக்களுக்கு கொண்டு சேர்த்தார். குமரியில் சிலை அமைக்க 1975-ஆம் ஆண்டே திட்டமிட்டாலும், அவருடைய கனவு 2000-ஆம் ஆண்டுதான் நிறைவேறியது. சிலையை உருவாக்குகின்ற பொறுப்பை சிற்பி கணபதி ஸ்தபதியார் அவர்களிடம் ஒப்படைத்தார்.133 அதிகாரங்களை குறிக்கின்ற வகையில் 133 அடியில் சிலை அமைத்தார். ஏறத்தாழ நான்கு ஆண்டுகளில் முத்தமிழறிஞர் கலைஞரின் கருத்துக்கு சிற்பக் கலைஞர் திரு. கணபதி ஸ்தபதி காட்சி வடிவம் தந்து அந்த சிலையை உருவாக்கினார்.
சிலை வடிவமைக்கின்ற பணி நடைபெறும்போது, “சிலை நிற்குமோ நிற்காதோ”- என்று சந்தேகமாக கேட்டவர்களிடம் எல்லாம், ஸ்தபதி அவர்கள், “அலையும் மலையும் இருக்கும் வரை சிலை அசையாது இருக்கும், கவலைப்படாதீர்கள்”- என்று சொன்னார்.அதை உறுதிப்படுத்துகின்ற விதமாக தமிழ்நாட்டையே உலுக்கிய ஆழிப்பேரலையின்போது கூட எந்தவித பாதிப்பும் இல்லாமல், கம்பீரமாக நிமிர்ந்து நின்றார் திருவள்ளுவர்.”மக்கள் தொண்டும் வள்ளுவர் சிலையும் என் பிறவிப் பெரும்பயன்” என – செவ்வனே முடிவுற்ற திருவள்ளுவர் சிலைப் பணி 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று கலைஞர் அவர்களால் நாட்டிற்கு – தமிழினத்திற்கு வழங்கப்பட்டது.பொத்தானை அழுத்தும்போது என் உடம்பு நடுங்கியது- என்று உணர்ச்சி வசப்பட்டார் தலைவர் கலைஞர். இந்த விழாவில்தான் திருவள்ளுவரை அய்யன் திருவள்ளுவர்- என்று அழைக்கும்படி தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் எதை செய்தாலும் கலை நுணுக்கத்தோடு பார் போற்றும் வகையில் செய்வார் என்பதற்கு விண்ணைத் தொடும் வண்ணம் உயர்ந்து நிற்கின்ற திருவள்ளுவர் சிலையும் ஒரு சான்று.
இப்படி பெருமைமிகு சிலை வெள்ளி விழா காண்கிறது. வரும் டிசம்பர் 31-ஆம் தேதி மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி இரண்டு நாட்களும் தமிழ்நாடு அரசு, 25 ஆண்டு நிறைவுப் பெருவிழாவை கொண்டாட இருக்கிறது. இந்த வெள்ளிவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் – கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படும்.
➢ அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டிருக்கின்ற இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும்.
➢ அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு செய்யப்படும்.
➢ வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் இணைய கழக மையங்கள், தமிழ்ச் சங்கங்கள், பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள், புது டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் ஒளிபரப்பப்படும்.
➢ வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் இணையக் கழக மையங்கள் மூலமாக திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டி நடத்தப்படும்.
➢ அனைத்து மாவட்ட நூலகங்களிலும், அன்றைய நாள் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு, திருக்குறளின் பெருமையை உணர்த்துகின்ற நிகழ்ச்சிகள், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் செய்யப்படும்.
➢ திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
➢ டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் இந்தியாவின் வரலாற்றை தென் குமரியிலிருந்து எழுத வேண்டும் என்ற நம்முடைய இலக்கின் அடையாளமான கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். உலகெங்கும் உள்ள என் அருமைத்தமிழர்கள் எங்கிருந்தாலும் வருக! வருக! என்று அன்புடன் அழைக்கிறேன்.
உலகப் பொதுமறையை உருவாக்கிய வள்ளுவர், தமிழர் என்பது சிறப்பு!
உலகமே அவரை கொண்டாடிக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு!
அவருக்கு 133 அடியில் சிலை அமைத்தது பெரும் சிறப்பு!
அத்தகைய சிலை இப்போது வெள்ளிவிழா கொண்டாடுவது வெகுசிறப்பு!
வள்ளுவம் என்பது வாழ்வியல் நெறியாக மாற வேண்டும்.
சமுதாயம் – குறள் சமுதாயமாக மலர வேண்டும்.
வேற்றுமையின் வேர்களை கிள்ளியெறிய வள்ளுவ மருந்தே பொது மருந்தாக ஆக வேண்டும்.
வாழிய குறளும், வள்ளுவர் புகழும்… வாழிய வாழியவே!
இவ்வாறு தெரிவித்தார்.
The post வாழிய குறளும், வள்ளுவர் புகழும்… வாழிய வாழியவே!.. டிச.31, ஜன.1ல் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.