×

ஏ.ஐ தொழில்நுட்பத்திடம் எகத்தாளம் காட்டிய காட்டு யானை

*சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

கோவை : கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் இருந்து, கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கும் யானைகள் இடம்பெயர்வது வழக்கமாகி வருகிறது. மலையையொட்டிய பகுதிகளில் மட்டுமே சுற்றித்திரிந்த இந்த யானைகள், சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் சர்வ சாதாரணமாக நுழைய தொடங்கிவிட்டன.

வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, யானை வழித்தடங்களில் கட்டிடங்கள் கட்டுவது போன்ற விதிமுறைகளை மீறிய செயல்பாடுகள் காரணமாக, காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துவிடும் சம்பங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அவ்வாறு ஊருக்குள் புகும் யானைகள் குப்பை கழிவுகள், ரேஷன் அரிசி போன்றவற்றையும் சாப்பிட்டு பழகியுள்ளது. மனிதர்களின் உணவுகளை சாப்பிட்டு பழகிய இந்த யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து வீடுகள், ரேஷன் கடைகள் உள்ளிட்டவற்றை உடைத்து சாப்பிடும் பழக்கத்துக்கு மாறியுள்ளன. இது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தாலும், தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது, வீடுகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை மதுக்கரை, தொண்டாமுத்தூர், தடாகம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த யானைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், பலன் இல்லை. இந்நிலையில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கோவை வனத்துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகளை விரட்டி வருகிறது.

இதில், காரமடையை அடுத்துள்ள கெம்மராம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பமான ஏஐ (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அதில் வெற்றி கண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம்-கேரளா வனப்பகுதியை ஒட்டியுள்ள கோவை ஆனைகட்டி பகுதியிலும் இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகளை விரட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆனைகட்டியை அடுத்த கோபனாரி பகுதியில் வனத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒற்றை யானை வெளியே வந்தது. அப்போது, வன எல்லையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.ஐ. தொழில்நுட்ப காமிரா ஒலி எழுப்பியது.

ஆனால், இந்த சைரன் சத்தத்தை கேட்ட அந்த யானை, சில நொடிகள் அங்கேயே நின்று, மீண்டும் மின்வேலியை தாண்டி ஊருக்குள் சென்றுவிட்டது. இந்த காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஏ.ஐ தொழில்நுட்பத்திடம் எகத்தாளம் காட்டிய காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Western Ghats ,Tamil Nadu ,Kerala ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல், சிறுவாணி போன்ற சுற்றுலா...