×

பள்ளிக்கு சேர்ந்து 2 ஆண்டே ஆன ஆசிரியைக்கு பணி வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை கோரி பெண் ஆசிரியர் தர்ணா

*ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

ஊட்டி : ஊட்டியில், பணி மூப்பு அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டிய பணியை பள்ளியில் சேர்ந்து 2 ஆண்டுகளே ஆன ஆசிரியைக்கு பணி வழங்கிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை, தனது கணவருடன் சேர்ந்து கையில் பதாகை ஏந்தியபடி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதுநிலை ஆசிரியராக சத்தியவதி என்பவர் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் விலங்கியல் ஆசிரியை பணி ஓய்வு பெற்ற நிலையில் அந்த பதவிக்கு மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக தேர்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தேர்வில் பணி மூப்பு அடிப்படையில் சத்தியவதிக்கு இந்த பதவி வழங்கப்படும் எனவும், நிர்வாகம் கூறியதாகவும் தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்த பதவிக்கு இந்த பள்ளியில் சேர்ந்து 2 ஆண்டுகளே ஆன ஆசிரியர் ஒருவருக்கு நிர்வாகம் பதவி வழங்கி ஆணை வழங்கியதாக தகவல் கிடைத்ததை அடுத்து சத்தியவதி நிர்வாகத்திடம் முறையீடு செய்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் இதுகுறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி காலை பள்ளியில் சேர்ந்து 2 ஆண்டுகளே ஆன ஆசிரியைக்கு பதவியை வழங்கி அதற்கான ஆணையையும் வழங்கி பள்ளி நிர்வாகம் கையெழுத்து பெற்றுள்ளது. இதனையடுத்து, தனக்கு சேர வேண்டிய பதவியை சுமார் ரூ.17 லட்சத்தை பணத்தை பெற்றுக்கொண்டு அவருக்கு வழங்கியதாக கூறி நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் சத்தியவதி மனு அளித்தார்.
அந்த மனுவில், தனக்கு சேர வேண்டிய பதவியை இன்னொரு ஆசிரியருக்கு வழங்கியது கண்டிக்கத்தக்கது. எனவே, கலெக்டர் இந்த விவகாரத்தில் சரிவர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த சூழலில் மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் முதுநிலை ஆசிரியர் சத்தியவதி நேற்று மதியம் ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனது கணவருடன் சேர்ந்து கையில் பதாகை ஏந்திய படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த ஊட்டி வட்டாட்சியர் சரவணகுமார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சத்தியவதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். பின்னர், கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post பள்ளிக்கு சேர்ந்து 2 ஆண்டே ஆன ஆசிரியைக்கு பணி வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை கோரி பெண் ஆசிரியர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Dharna ,Ooty Collector ,Ooty ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக...