திருவாரூர், டிச. 27: திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 50 ஆயிரத்து 678 விவசாயிகளுக்கு ரூ 377 கோடி அளவில் கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். திருவாருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுபாடில்லாமலும், மழைநீரால் சூழப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.
கலெக்டர் சாரு பேசியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் இயல்பாக டிசம்பர் மாத மழையளவு 175.78 மி.மீ என்ற நிலையில் இன்று (நேற்று 26ந் தேதி) வரையில் 269.91 மி.மீ மழை பெய்துள்ளது. 2024-25ம் ஆண்டில் குறுவை பருவத்தில் 99 ஆயிரத்து 905 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இதுவரை 173 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 93 ஆயிரத்து 986 மெ.டன் அளவில் கொள்முதல் செய்யப்பட்டு இதன்மூலம் 20 ஆயிரத்து 960 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், சம்பா மற்றும் தாளடி சாகுபடியாக 3 லட்சத்து 57 ஆயிரத்து 604 ஏக்கரில் சாகுபடியானது நடைபெற்றுள்ளது.
இதனையொட்டி நடப்பாண்டில் 50 ஆயிரத்து 678 விவசாயிகளுக்கு ரூ.377 கோடியே 44 லட்சம் அளவில் கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் ஒரு விவசாயி அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் வீதம் மொத்தம் 14 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிற்கு 91.8 மெ.டன் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீத மானியத்தில் மண்புழு உரம் தயாரித்தல் மையம், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மையம், மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டம், வேளாண் காடுகள் திட்டத்தின் வாயிலாக வேப்ப மரங்கள் நடுதலை ஊக்குவித்தல், உயிர் பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களை வளர்த்தெடுப்பதற்கான ஆடாதொடை, நொச்சி நடவுப் பொருட்கள் வழங்குதல், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வட்டார வாரியாக ஒரு கிராமத்தில் அங்கக வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைகள் உருவாக்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் புகாரி, கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா, ஆர்.டி.ஒக்கள் சௌம்யா, வேளாண் இணை இயக்குநர் பாலசரஸ்வதி, துணை இயக்குனர் லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமாஹெப்சிபாநிர்மலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post திருவாரூரில் நடப்பாண்டில் 50 ஆயிரத்து 678 விவசாயிகளுக்கு ரூ.377 கோடியில் கூட்டுறவு பயிர் கடன் appeared first on Dinakaran.