×

கனவில் வந்து வழிகாட்டும் ஸ்வப்ன வராஹி

லகு வராஹி, உன்மத்த வராஹி, அஷ்வாரூட வராஹி, சிம்ஹாரூட வராஹி, ஆதி வராஹி, மகிஷாரூட வராஹி, மஹா வராஹி, ஸ்வப்ன வாராஹி ஆகியவை வராஹி தேவியின் எட்டு வடிவங்களாகும். மேலே நாம் கண்ட வராஹி தேவியின் எட்டு வடிவங்களில் இந்த ஸ்வப்ன வராஹி தேவியும் ஒன்று. ஸ்வப்னம் என்றால் கனவு என்று பொருள். நல்ல உறக்கத்தில் நினைவில் நிகழ்வது போல நமது மனதில் நிகழ்வதுதான் கனவு எனப் படுகிறது. உறக்கம் கலைந்ததும் கனவு கலைந்துவிடுகிறது. கனவுகள் பலன் தரும் என்று நமது இந்தியர்கள் தொன்று தொட்டே நம்பி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, அதிகாலையில் காணும் கனவு பலித்துவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ராமாயணத்தில் திரிஜடை, தான் கண்ட கனவுகளைக் கொண்டு, சீதை ராமனோடு விரைவில் சேர்ந்து விடுவாள் என்று சொன்னதும் இங்கே சிந்திக்கத் தகுந்தது.

ஒருவர் காணும் கனவைக கொண்டு, அவர்களின் எதிர்காலத்தைக கணிக்கும் சாஸ்திரத்துக்கு சொப்பன சாஸ்திரம் என்றே பெயர். கனவில் நல்ல காட்சிகள் தோன்றினால், வாழ்வில் மகிழ்ச்சியை உண்டாக்கும். இதைச் சுந்தர சோபன சொப்பனம் என்று சொல்வார்கள்.அதே சமயம், கெட்ட கனவுகள் தோன்றினால், அது மனதிற்குள் பயத்தையும் சஞ்சலத்தையுக் ஏற்படுத்தும். வராஹி தேவியின் பல வடிவங்களில் ஒரு வடிவமான இந்த ஸ்வப்ன வராஹி தேவி, நல்லவர்களுக்கு நல்ல சொப்பனம் மூலம் வாழ்விற்கு வழிகாட்டி, தீயர்களுக்குக் கெட்ட சொப்பனம் கொடுத்து, அச்சுறுத்தி அவர்களின் புத்தியை பேதலிக்க செய்கிறாள். இப்படி சொப்பனத்தை அருள்புரியும் ஆயுதமாகக் கொண்டதால், இவளுக்கு ஸ்வப்ன வராஹி என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.

ஸ்வப்ன வராஹி தத்துவம்

அந்த காலங்களில் மரச்செக்கில் மாடு செக்கிழுக்கும். மாட்டின் கழுத்தில் இருக்கும் நுகத்தடியில் இருந்து ஒரு குச்சி நீண்டு கொண்டிருக்கும். அந்த குச்சியில் ஒரு புல் கட்டு தொங்கிக்கொண்டிருக்கும். செக்கிழுக்கும் இந்த மாடு, நுகத்தடியின் முனையில் இருக்கும், புல்லை உண்ணவேண்டும் என்ற ஆசையில் அதை நோக்கி நகரும். ஆனால் அதற்கு, நுகத் தடியில்தான் புல் கட்டப்பட்டிருக்கிறது என்று தெரியாது. ஆகவே மாடும் அதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கும்.

அதே சமயம்மாட்டோடு சேர்ந்து அந்த நுகத்தடியும் நகர்வதால், மாட்டுக்கும் புல்லுக்கும் இடையில் இருக்கும் தூரம் குறையவே குறையாது. ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் மனித வாழ்க்கையும் இப்படிதான். எந்த மனிதனை கேட்டாலும், அவன் தனது வாழ்க்கையின் குறிக்கோள் நிம்மதியாக இருப்பது என்று சொல்லுவான். ஆனால் இந்த நிம்மதி என்ன என்பது அவனுக்குத்தெரியாது என்பதே உண்மை.

குழந்தை பிறந்தால் நிம்மதி என்பான். குழந்தை பிறந்ததும், அந்த குழந்தை நன்றாகப் படித்தால் நிம்மதி என்பான். அந்த குழந்தை நன்றாகப்படித்து முடித்தால், அதற்கு வேலை கிடைத்தால் நிம்மதி என்பான். வேலையும் கிடைத்து விட்டால், நல்ல சம்பளம் கிடைத்தால் நிம்மதி என்பான். அதுவும் கிடைத்தால் குழந்தைக்குக் கல்யாணம் ஆக வேண்டும் அப்போதுதான் நிம்மதி என்பான். கல்யாணமும் ஆகிவிட்டால், குழந்தைக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பான்.

அந்த குழந்தையும் பிறந்துவிட்டால், மேலே கூறிய அனைத்தும் அந்த குழந்தைக்கு நடக்க வேண்டும் என்பான். மொத்தத்தில் மனிதனுக்கு எது நிம்மதி என்பதில் ஒரு நிலையான நிலைப்பாடு இல்லை.கானல்நீரை போல இருக்கும் நிம்மதியை தேடி அவன் ஓடிக் கொண்டே இருக்கிறான். வாழ்க்கையை அந்த நிம்மதியைத் தேடி தேடியே வாழ்ந்து முடிக்கிறான். பிறகு மரிக்கிறான். பிறகு மீண்டும் பிறக்கிறான். மீண்டும் நிம்மதியை தேடி அலைகிறான். நிம்மதி என்ற கனவுநிலை ஒன்றை தேடி தேடி, இவன் அலைகிறான். ஆனால் உண்மையில் இறைவனோடு இரண்டற கலப்பதுதான் நிஜமான நிம்மதி. அதுவே பூரண ஞானம். அந்த நிலையில்தான் ஒரு ஜீவன், பூரண ஞானத்தோடு விழிப்பு நிலையில் இருக்கிறான்.

இறைவனை விட்டு, ஜீவன் தன்னை வேறு ஒருவனாக உணரும், இந்த உலக வாழ்க்கை வெறும் மாயைதான். அதாவது ஒரு கனவு போலதான். நிலையான நிம்மதி எது என்றே தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கனவு நிலையை போன்ற வாழ்கையை, நீர்க்குமிழி போன்ற இந்த வாழ்க்கையை, விட்டு விழித்து எழுந்து ஞான நிலையை அடைய உதவுபவள் இந்த ஸ்வப்ன வாராஹி. அதாவது மாயை என்னும் கனவைக் கலைத்து ஞானத்தைத்தருபவள் இந்த தேவியின் அருளால், கனவு போன்ற பிறவிக்கடலை கடக்க முடியும். ஞானம் என்ற விழிப்பு நிலையை எய்த முடியும். இந்த தேவியின் மூல மந்திரத்தில் இருக்கும் ட: ட: என்ற அக்ஷரங்கள் சிவோஹம் என்ற பாவனை, அதாவது நானே சிவன், அனைத்தும் சிவன் என்ற மனநிலையை ஏற்படுத்துகிறது.

புராணங்களில் ஸ்வப்ன வராஹி

பிரம்மாண்ட புராணத்தின் ஒரு பகுதியாக லலிதோபாக்கியானம் இருக்கிறது. இதில் தேவர்களை பண்டாசுரன் என்ற அரக்கன் தொல்லை செய்கிறான். அவர்களை காக்க அம்பிகை, லலிதா தேவியாக தோன்றுகிறாள். தேவர்களை காக்க அசுரர்களை எதிர்த்து போர் செய்யப்புறப்படுகிறாள். தேவி லலிதாம்பிகை பண்டாசுரனை எதிர்த்து போர்புரிய சென்ற போது, லலிதாம்பிகையின் போர் தளபதியான வாராஹி தேவிக்கு, உதவி தேவதையாக அதாவது உப்பாங்க தேவதையாக போரில் உதவிபுரிந்து, மூன்றாம் நாள் போரில் மங்களன் என்ற அசுரனை ஸ்வப்ன வராஹி சம்ஹாரம் செய்தாள். இதில் ஒரு பெரும் தத்துவமே அடங்கி இருக்கிறது. மங்களாசுரன் என்ற அசுரனின் பெயருக்கு, மங்கலமானவன் என்று பொருள். அந்த அசுரனை இந்த தேவி வதம் செய்கிறாள். அதாவது மங்கலமானது, அமங்கலமானது என்ற பார்வையை வதம் செய்கிறாள்.

அனைத்திலும் இறைவனைக் காணும் உயர் நிலையை இவள் தருகிறாள். அனைத்திலும் இறைவனை காணும் போது, மங்களமான பொருளுக்கும், அமங்களமான பொருளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. இரண்டுமே இறைவன் தானே. இப்படி அனைத்திலும் இறைவனை பார்க்கும் ஞானத்தை இந்த தேவி தருவதாக, இவளது சரித்திரம் குறிப்பால் உணர்த்துகிறது.
இதில் மற்றொரு சூட்சுமமும் அடங்கி இருக்கிறது.

இந்த தேவி நடக்கப்போவதை முன் கூட்டியே, தனது பக்தர்கள் கனவில் வந்து காட்டுவாள் என்று பார்த்தோம். அப்படி, அவள் கனவில் வந்து உணர்த்தும் போது, சில சமயம் ஆபத்தான அல்லது அமங்கலமான செய்திகளைகூட உணர்த்தலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், அந்த ஆபத்தை அல்லது, அமங்கலத்தை எதிர்கொள்ள ஒரு மனதைரியம் வேண்டும். அம்பிகை உணர்த்திய ஆபத்தை கண்டு துவண்டு போனால், வருகின்ற ஆபத்தை அல்லது அமங்கலத்தை எதிர்கொள்ள முடியாது. இது மேலும் ஆபத்தை அல்லது அமங்கலத்தை பன்மடங்கு அதிகரிக்கும்.

ஆகவே, முதலில் இந்த அம்பிகை சாதகனுக்கு, நன்மையையும் தீமையையும் சமமாக பார்க்கும் பக்குவத்தை அல்லது ஞானத்தை தருகிறாள். பிறகு அவனுக்கு கனவில் தோன்றி வழிகாட்டுகிறாள். இதுவே இந்த ஸ்வப்ன வராஹி மங்களாசுரனை வதம் செய்ததற்கு பின் இருக்கும் ரகசியம்.

மந்திரங்களும் வழிபாடும்

இந்த தேவிக்கு பல வகையான மந்திரங்கள் இருக்கிறன என்பதை அறிய முடிகிறது. பதினைந்து எழுத்துக்களை கொண்ட மந்திரம், பதினெட்டு எழுத்துக்களை கொண்ட மந்திரம் என்று பல வகையான மந்திரம் இந்த தேவிக்கு இருக்கிறது என்பதை தந்திர சாஸ்திர நூல்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த ஸ்வப்ன வராஹியை முறையாகவும் பக்தியோடும் பூஜித்தால், நம்முடைய கஷ்டங்களுக்கு எல்லாம் கனவில் தோன்றி வழிகாட்டுவாள் என்று தந்திர சாஸ்திர நூல்கள் சொல்கிறது. அதுமட்டுமில்லை, வரும் ஆபத்தை முன்கூட்டியே, கனவில் வந்து சொல்லி நம்மை எச்சரிக்கவும் செய்வாள். இந்த தேவியின் மூல மந்திரத்தை ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு முன், ஆயிரத்து நூறு முறை ஜபித்துவிட்டு உறங்கினால், பதினொரு நாட்களுக்குள் கனவில் தோன்றி வழிகாட்டுவாள் என்பது சாதகர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.

மேலும், இந்த தேவியை பூஜிக்கும் போது, இவளுடைய உபாங்க தேவதைகளையும் (அதாவது துணை தெய்வங்கள்) சேர்த்து பூஜிப்பது அதீத பலன்களை தரும் என்று தந்திர சாஸ்திர நூல்கள் சொல்கிறது. உச்சாடனி, உச்சாடனேஷ்வரி, சோஷனேஷ்வரி, மாரணி, மாரணேஷ்வரி, பூஷனி, பூஷனேஷ்வரி, தாராசினி, தாராசனேஷ்வரி, கம்பினி, கம்பனேஷ்வரி, அர்ஜினா விவர்த்தினி, அர்ஜினா விவர்த்தனேஷ்வரி, வஸ்து ஜடேஷ்வரி, சர்வ சம்பத் தனேஷ்வரி என்ற பதினாறு யோகினிகளும், வாராஹி தேவியின் உபாங்க தேவதைகள் ஆவார்கள். இந்த தேவிக்கு வெண்தாமரை மலர் மிக சிறந்தது. இந்த தேவிக்கு ஹோமங்கள் செய்யும் போது வெண்தாமரை மலர்களை உதிர்க்காமல் முழு பூக்களை ஆகுதிகளாக சேர்க்க வேண்டும். இல்லை என்றால் எள்ளை பயன் படுத்தலாம்.

அதேபோல, இந்த தேவிக்கு தர்ப்பணம் செய்யும் போது, அதை இளநீரால் செய்வது சிறந்த பலனை தரும். இந்த தேவியின் அருளை பெற, சுவாசினி பூஜை செய்யும் போது, மாதுளம் பழம், தேன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இளநீர் உளுந்து வடை போன்றவற்றை பயன் படுத்துவது அதீத பலன்களை தரும்.

ஸ்வப்ன வராஹி தியானம்
“மேக ஷ்யம ருசிம் மனோஹர குசாம் நேத்ர த்ரயோர் பாசிதாம்
கோ சசி சேகராமசலயா தம்ஷ்ட்ரா தலே சோபிதாம்
பிப்ராணாம் ஸ்வ கராம்புஜை ரஸிலதாம் சர்மாஸி பாஸம் ஸ்ருணீம்
வராஹிம் மனு சிந்தயேத்ஹய வராரூடாம் சுபாலங்கருதீம்’’

சூல் கொண்ட மேகத்தின் நிறம் கொண்டவளாய், மூன்று கண்கள் பள பளக்க, வராக முகத்தோடு, சிரத்தில் சந்திரனை சூடியவளாக, கோரைப்பற்களின் இடுக்கில் பூமியை தாங்குபவளாய், திருக்கரங்களில் கத்தி கேடயம் பாசம் அங்குசம் தாங்கிக்கொண்டு, புன்னகை தவழும் முகத்தோடு, தெய்வீக வெண் குதிரையின் மீது பவனி வருகிறாள் அன்னை ஸ்வப்ன வாராஹி தேவி. மேலே நாம் கண்ட தியான ஸ்லோகம் சொல்லியும் இந்த ஸ்வப்ன வராஹியை வணங்கலாம்.

ஜி.மகேஷ்

The post கனவில் வந்து வழிகாட்டும் ஸ்வப்ன வராஹி appeared first on Dinakaran.

Tags : Swapna Varahi ,Laku Varahi ,Unmatta Varahi ,Ashwaruda Varahi ,Simharuda Varahi ,Adhi Varahi ,Makisharuda Varahi ,Maha Varahi ,Swapna Warahi ,Varahi ,
× RELATED பவானியில் அனைத்து மக்களையும் காக்கும் காவல் தெய்வம் செல்லியாண்டியம்மன்.!