×

திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை

பகுதி 6

ஆடை கட்டுப்பாடுகள்

குருவாயூர் கோயிலில் எப்படி ஆடைக் கட்டுப்பாடுகள் இருக்கிறதோ.. அதே போல், திருமலையிலும் ஆடைக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. திருமண விழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்ற தனிப்பட்ட முறையில் நடைபெறுகின்ற இடங்களில், ஆடைகளை மிக சரியாக அணிந்து செல்கின்றனர். ஆனால், கோயில்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் ஆடைகளை சற்று குறைபாடுடனே அணிகிறார்கள். குறைந்தது, கோயில்களில் ஆடைகளை குறைவின்றி சரியாக அணிந்து கொண்டு வழிபடுவது மிகவும் நல்லது. இதில், ஆண் – பெண் என பாலின பாகுபாடுகள் இல்லை. யார் ஆடைகளை சரியாக அணியவில்லை என்றாலும், அது தவறுதான். ஏன் கோயில்களில் ஆடை குறைவானவற்றை அணிவது தவறு என்று கூறுகிறார்கள்? ஆணோ அல்லது பெண்ணோ ஆடைகளை சரிவர அணியாமல், தன்னிச்சையாக ஆடைகளை அணிந்துகொண்டு கோயிலுக்கு செல்லும்போது, அதனை பார்ப்பவர்களின் மனது, கடவுளை வழிபடாது, உங்களின் மீது திசை திரும்பலாம். (Distract) அது மிகப்பெரிய தவறல்லவா?

ஆகையால்தான் மிக சரியான ஆடைகளை மட்டுமே அணிந்துகொண்டு, கடவுளை வழிபட வேண்டும் என்கிறது கோயில் நிர்வாகம். சரி.. திருமலையில் எத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளன? திருமலை முழுவதிலும் ஆடை கட்டுப்பாடுகள் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் ஆண் – பெண் பேதமின்றி ஆடைகளை அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அணிந்து கொள்ளலாம். ஆனால், ஏழுமலையானை தரிசனம் செய்யும் சமயத்தில் மட்டுமே, ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள்; மிகவும் மாடனாக இருக்கும் உடைகளுக்கு அனுமதியில்லை. குறிப்பாக, முழு கை – கால்கள், போன்ற உடல் அங்கங்கள் தெரியும் அளவிற்கு அணியக் கூடாது. சுடிதார் அணிந்துக் கொள்ளலாம். அதனுடன் கட்டாயமாக துப்பட்டா (Dupatta) அணிந்து வரவேண்டும். புடவைகள், ஆஃப் சாரி (Half-Saree) அணியலாம். அதே போல், ஆண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகள்; ஆஃப் டவுசர் (Half Trouser), லுங்கி, துண்டுகளை (Towel) மட்டும் அணிவது, ஆகியவைகள் அனுமதியில்லை. வேஷ்டி, முழு கைகள் தெரியாத அளவிற்கு சட்டைகள், பேன்ட், பைஜாமா குர்தா ஆகியவைகளை அணிந்துகொண்டு மலையப்பஸ்வாமியை தரிசித்து அருள் பெறலாம். இத்தகைய அறிவிப்பு பலகையை திருமலை நடைப்பாதையிலும் காணலாம்.

கடந்து வந்த பாதைகள்

காலை 4.30 மணிக்கு தொடங்கிய நம் பயணம், அலிபிரி வாக் வழியாக முதல் படியில் ஏறி, கோவிந்தா.. கோஷமிட்டு, காளி கோபுரத்தை கடந்து, வழிநெடுக்க எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பக்தி இன்னிசைகளை கேட்டவாறு, 2500 படிகளை கடந்த பின்னர், 20 அடி உயரம் கொண்ட ஸ்ரீ பேடி ஆஞ்சநேயரை பரவசத்துடன் தரிசித்து, தோரசனி மண்டபம், கொத்த மண்டபம், முக்குபாவி மண்டபம் ஆகிய சின்னசின்ன கோபுர வாயிலை கடந்ததும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை மனமுருகி தரிசித்தோம். கடைசி நுழைவாயிலான மொகாலிமிட்டா கோபுரத்தை அடைந்து, இன்னும் இரண்டே இரண்டு கிலோ மீட்டரை அடைந்தால், திருமலையில் அடைந்துவிடலாம் என்கின்ற தூரத்தில், நம் பயணம் தொடர்கிறது. சுமார் ஒரு கி.மீ., தூரம் கடந்ததும், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் போன்ற ஆழ்வார்கள் நம்மை வரவேற்கின்றார்கள்.

திருமாலை காண திருமலைக்கு வந்தோம்

ஆழ்வார்களை தரிசித்து கடந்த பின்னர், சுமார் 50 படிகளை ஏறி கடந்தோமேயானால், “திருமலையை’’ அடைந்துவிடலாம். காலை 4.30 மணிக்கு தொடங்கிய நம் பயணம், 11.00 மணி அளவில் மலையப்பஸ்வாமியின் அனுக்கிரகத்தால், நிறைவடைந்திருக்கிறது. ஒரு ஆறரை மணி நேரம் ஆகியிருக்கிறது. ஆனால், நாம் செய்திகளை சேகரித்து, புகைப் படங்களை எடுத்துக்கொண்டு, நின்று நிதானமாக நடைப் பயணத்தை மேற்கொண்டதால், ஆறரை மணி நேரம். இல்லையெனில், இன்னும் சீக்கிரமாகவே சுமார் 4 மணி நேரத்திற்குள் திருமலையை அடைந்துவிடலாம். அடைந்ததும், சற்று தூரத்தில் அலிபிரியில் (கீழ் திருப்பதியில்) இருந்து அனுப்பப்பட்ட துணிப்பைகளை பெற்றுக் கொள்ளலாம். அதனை பெற்றுக் கொண்டதும், நடந்து சென்றால் இடதுகை பக்கமாக, “பாலாஜி பேருந்து நிலையம்’’ இருக்கிறது. அதன் அருகில் நின்றால், இலவச பேருந்து வரும். அதில் ஏறி திருமலையில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். முற்றிலும் இலவசம்.திருமலையில் இலவசமாக, 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுகின்றன. அங்கு சென்று உணவருந்தவும், இந்த இலவச பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தரிசனத்திற்கு செல்ல, கீழ் திருப்பதிக்கு செல்ல பாலாஜி பேருந்து நிலையம், முடி காணிக்கை தரும் இடத்திற்கு செல்ல இப்படி திருமலையில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இலவச பேருந்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சமர்ப்பணம்

அலிபிரியில் இருந்து நாம் நம் பயணத்தை மேற்கொள்ளும் முன்பாக, “உன்னை தரிசிக்க வருகிறேன். எந்தவொரு தடைகளும் இல்லாமல், உன் பக்தனை அணைத்துக் கொண்டு, ஏழுமலைகளை என்னை கடக்க வைக்கவேண்டும்’’ என்று சங்கல்பம் செய்து கொண்டு திருமலைக்கு செல்ல நடைப் பயணத்தை தொடங்கலாம். அதே போல், திருமலைக்கு வந்தவுடன், `நான் வேண்டியதை போல், கடக்க வைத்துவிட்டாய்.. அதே போல், “மனிதன் என்னும் இந்த மானுட பிறவியில் இருந்தும் என்னை கடக்க செய்து, முக்தி என்னும் மீண்டும் பிறவா வரத்தை கொடுத்து, உன்னோடு என்னையும் ஐக்கியம் செய்திட பிரார்த்திக்கிறேன்’’ என்று மனதால் திருமலையைவிட்டு கீழே இறங்கும் வரை நாம் வேங்கடவனை வேண்டுவோம். மேலும், நாம் அலிபிரியில் இருந்து தொடங்கிய நடைப் பயணத்தை, திருமலைக்கு வந்தவுடன் மலையப்பஸ்வாமிக்கு சமர்ப்பணம் செய்வோம். ஓம் ஸ்ரீ வேங்கடேசாய…

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!

The post திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை appeared first on Dinakaran.

Tags : Guruvayur Temple ,
× RELATED குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் நாளை குசேலன் தின விழா