குளச்சல்: குளச்சலில் சிப்பி மீன் விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள் கவலையடைந்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன. இவற்றுகள் மூலம் கணவாய், இறால், கேரை, சுறா, நெய் மீன், சூரை, நெத்திலி, சாளை, வெளமீன் போன்ற மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் ‘சிப்பி’ மீன்கள் பிடிக்கப்படுகிறது.
முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருவர். குமரி மாவட்டத்தில் குளச்சல், கோடிமுனை, கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த சிப்பி மீன்களுக்கு கேரளாவில் ஓட்டல் மற்றும் மதுபான பார்களில் பெரும் மவுசு உள்ளதால் கேரள வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். தற்போது நவம்பர் மாதம் தொடங்கி உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் துவங்கி உள்ளது. குளச்சலில் மீனவர்கள் நேற்று முதல் சிப்பி மீன் எடுத்து வருகின்றனர். எடுத்து வரப்பட்ட சிப்பி மீன்களை மீனவர்கள் ஏலக்கூடத்தில் கொண்டு வந்து ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.
சுமார் ஆயிரம் எண்ணம் கொண்ட ஒரு பெட்டி சிப்பி மீன்கள் காலையில் ₹.4 ஆயிரம் விலை போனது. பின்னர் நேரம் போக போக விலை படிப்படியக குறைந்து ₹3 ஆயிரத்திற்கு விலை போனது. இதனால் சிப்பி மீன் தொழிலாளர்கள் கவலையடைந்து உள்ளனர். கடந்த ஓகி புயல் தாக்குலுக்கு பின்னர் சிப்பி மீன் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலையடைந்து உள்ளனர். இந்த வருடமும் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் சிப்பி எடுக்கும் தொழில் மந்தமாக உள்ளது. கேரள வியாபாரிகள் வராததால் சிப்பி மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. சிப்பி மீன் எடுக்கும் தொழில் மந்தமாக உள்ளதால் சிப்பி எடுக்கும் மீனவர்கள் கவலையடைந்து உள்ளனர்.
The post குமரியில் சிப்பி மீன் சீசன் தொடக்கம்: விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை appeared first on Dinakaran.