×
Saravana Stores

பாம்பன் புதிய பாலத்தில் இறுதிக்கட்ட ஆய்வு பணி 13ம் தேதி தொடக்கம்: வரும் 20ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்?

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய பாலத்தில் இறுதிக்கட்ட ஆய்வு பணி வரும் 13ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வரும் 20ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. புதிய ரயில் பாலம் 2,078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரம் கொண்டது. 333 கான்கிரீட் அடித்தளங்களும், 101 தூண்களும், எஃகு மூலம் பூசப்பட்ட 99 இணைப்பு இரும்பு கர்டர்களையும் கொண்டது.

இந்த செங்குத்து தூக்குப்பாலத்தின் உயரம் 27 மீட்டர், நீளம் 77 மீட்டர். செங்குத்து தூக்குப்பாலம் சுமார் 700 டன் எடை கொண்டது. வின்ச் மெஷின் தொழில்நுட்பத்தில் லிப்ட் முறையில் இயங்கக்கூடிய இந்த தூக்குப்பாலம் 17 மீட்டர் உயரம் வரை வேகமாக உயர்த்தி இறக்கப்படும் ஆற்றல் உடையது. இதுவே இந்தியாவின் முதல் ரயில்வே கடல் செங்குத்து தூக்குப்பாலமாகும். இதனை இயக்குவதற்கு அருகிலேயே 2 மாடி கட்டிடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, சிக்னல் அறை, கேமரா கண்காணிப்பு அறை கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் கடலில் கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த புதிய ரயில் பாலம், பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பல்வேறு ஆய்வுகள், ரயில் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றது. இந்த புதிய ரயில் பாலம் எப்போது திறக்கப்படும் என ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 20ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் வரும் 13, 14 ஆகிய 2 நாட்கள், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதிக்கட்ட ஆய்வு செய்யவுள்ளனர். அதற்கு பிறகு பாலத்தில் ரயிலை இயக்க அனுமதி வழங்கப்படும் என ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திறப்பு விழாவிற்கு தயாராகி வரும் புதிய ரயில் பாலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அப்துல் கலாமின் பெயரை பாலத்துக்கு சூட்ட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி திறக்கவுள்ள புதிய ரயில் பாலத்திற்கு ‘கலாம் சேது’ என பெயர் சூட்டப்பட உள்ளதாக ரயில்வே உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.

The post பாம்பன் புதிய பாலத்தில் இறுதிக்கட்ட ஆய்வு பணி 13ம் தேதி தொடக்கம்: வரும் 20ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்? appeared first on Dinakaran.

Tags : Bombon New Bridge ,PM Modi ,Rameshwaram ,Pampan New Bridge ,Modi ,Pamban Sea ,Ramanathapuram District, Rameswaram ,Dinakaran ,
× RELATED காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடி