×

2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம்: திருமாவளவன் திட்டவட்டம்


திருச்சி: 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் நியமிக்க முடிவு எடுத்துள்ளோம். ஏற்கனவே 144 மாவட்ட செயலாளர் நியமித்து ஓராண்டு கடந்திருக்கிறது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நுண்ணிய அளவில் வரைமுறை செய்து ஏராளமான பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய முடிவு செய்துள்ளோம். கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் 7 ஆண்டுகளாக தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து வருகிறோம். இந்த கூட்டணியை விட்டு விட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை என்று ஏற்கனவே பலமுறை சுட்டி காட்டியுள்ளேன். விசிக மீது திட்டமிட்டு சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும். சாதியம் தான் நம்மை பிளவுப்படுத்தி வீழ்த்தியுள்ளது.

அதை எதிர்க்க வேண்டும் என்றால் ஆரியத்தை எதிர்க்க வேண்டும். திராவிடம் கருத்தியல் இல்லை என்றால் சனாதனம் நம்மை விழுங்கி இருக்கும். தமிழை இந்தி விழுங்கியிருக்கும், தமிழை சமஸ்கிருதம் விழுங்கியிருக்கும். தமிழர் இனம் இருக்கிறோம் என்றால் திராவிட கருத்தியல் தான் காரணம். ஆனால் திராவிடத்தை அரசியல் எதிர்ப்பாக மாற்றுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்பா?
திருமாவளவன் கூறுகையில், ‘சட்ட மேதை அம்பேத்கர் குறித்த தொகுப்பு ஒன்று தயாராகி வருகிறது. இத்தொகுப்பில் நீதிபதி சந்துரு, விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுன் உள்பட 40க்கும் மேற்பட்டோர் பங்களிப்பு செய்துள்ளனர். சென்னையில் டிசம்பர் 6ம் தேதி இந்நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. புத்தக வௌியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஒரு சில வாரங்களுக்கு முன்பு புத்தக விழாவில் தவெக தலைவர் விஐய்யும், ரஜினிகாந்தும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். நாங்களும் அதற்கு இசைவு அளித்திருந்தோம். இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு முன்னணி பொறுப்பாளர்களோடு நாங்கள் கலந்து பேசி முடிவு செய்வோம்’ என்றார்.

The post 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம்: திருமாவளவன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,2026 assembly elections ,Thirumavalavan ,Trichy ,Liberation Tigers Party ,Trichy Airport ,District secretary ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயுடன் கூட்டணியா? ஓபிஎஸ் பேட்டி