திருத்தணி: திருத்தணி அருகே இன்று காலை சரக்கு வேனும் தொழிற்சாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் டிரைவரின் 2 கால்களும் துண்டாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்தில் பயணம் செய்த 8 பேர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருத்தணி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களில் பலர், பெரும்புதூரில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.
வழக்கம்போல் இன்று காலை திருத்தணியில் இருந்து தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்தில் 30 தொழிலாளர்கள் புறப்பட்டனர். பேருந்தை அரக்கோணம் பகுதியை சேர்ந்த தினகரன் (34) ஓட்டிச்சென்றார். கனகம்மாசத்திரம் அருகே லட்சுமாபுரம் பகுதியில் வந்தபோது, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைத்தார்களை இறக்கிவிட்டு திருத்தணி நோக்கி வந்த சரக்கு வேனும் தொழிற்சாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேன், தொழிற்சாலை பேருந்தின் முன்பகுதிகள் நொறுங்கின.
இதில், ஆந்திர மாநிலம் கோடூர் பகுதியை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் சலபதி (42) என்பவரின் இரண்டு கால்களும் துண்டாகி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த சலபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் பயணம் செய்த திருத்தணி, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ராஜா, சிவா, யுவராஜ், மகேந்திரன், அருண்குமார், பூவரசன், சண்முகம், நாகராஜன் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி டிஎஸ்பி கந்தன் மற்றும் போலீசார் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர். விபத்து காரணமாக திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருத்தணி அருகே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
The post திருத்தணி அருகே இன்று காலை பரபரப்பு; சரக்கு வேன் – பேருந்து மோதல்: டிரைவரின் கால்கள் துண்டானது appeared first on Dinakaran.