×

தீபாவளி முடிந்து சென்னை திரும்பியவர்களால் தூத்துக்குடி, மதுரை, கோவை, சேலம் விமானங்களில் கட்டணம் உயர்வு: சென்னையிலிருந்து செல்ல கட்டணம் குறைவு

சென்னை: தீபாவளி விடுமுறைகள் முடிந்து, சென்னை திரும்பிய மக்களால் மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் நேற்று இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைந்தது. தீபாவளி திருநாள் மற்றும் வாராந்திர விடுமுறைகள் முடிந்து நேற்று (திங்கட்கிழமை) கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற் கூடங்கள் வேலை நாட்களாக தொடங்கின.

சொந்த ஊருக்கு சென்றிருந்த மக்கள் ஒட்டு மொத்தமாக நேற்று முன்தினம் மாலையில் இருந்து சாரைசாரையாக சென்னைக்கு திரும்பினர். அரசு, ஆம்னி பேருந்துகள், ரயில்கள், கார்கள், வேன்களில் சென்னைக்கு திரும்பினர். அதோடு பெரும்பாலானோர் விமானங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று வரையில், சென்னைக்கு திரும்பினர். இதனால் சென்னை விமான நிலைய வருகை பகுதியில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஆனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் இல்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விமான நிறுவனங்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைவாகவும், அதே நேரத்தில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் இரு மடங்குக்கு மேல் அதிகமான கட்டணங்களையும் வசூலித்தன. இது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரையிலிருந்து சென்னை வருவதற்கு நேற்று (திங்கட்கிழமை) விமானத்தில் ரூ.10,119 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு நேற்று விமான கட்டணம் ரூ.4,260 மட்டுமே. அதேபோல், தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்கு நேற்று விமான கட்டணம் ரூ.11,925. ஆனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு விமான கட்டணம் ரூ.6,771 மட்டுமே. திருச்சி- சென்னை விமான கட்டணம் ரூ.11,109. ஆனால், சென்னை- திருச்சி விமான கட்டணம் ரூ.5,796.

கோவை- சென்னை விமான கட்டணம் ரூ.10,179. ஆனால் சென்னை- கோவை விமான கட்டணம் ரூ.4,466. சேலம்- சென்னை விமான கட்டணம் ரூ.9,516. ஆனால் சென்னை- சேலம் விமான கட்டணம் ரூ.4,647. இதுபோல், ஒரே தூரத்துக்கான விமான பயணத்திற்கு போகும்போது ஒரு கட்டணமும், வரும்போது ஒரு கட்டணங்களையும் விமான நிறுவனங்கள் அமல்படுத்தி, பயணிகளிடம் கூடுதல் விமான கட்டணங்கள் வசூலித்தது பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

The post தீபாவளி முடிந்து சென்னை திரும்பியவர்களால் தூத்துக்குடி, மதுரை, கோவை, சேலம் விமானங்களில் கட்டணம் உயர்வு: சென்னையிலிருந்து செல்ல கட்டணம் குறைவு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Madurai ,Coimbatore ,Salem ,Chennai ,Diwali ,Trichy ,Tuticorin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி விமான நிலையத்தில்...