×

மாமல்லபுரம் மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு

மாமல்லபுரம், அக். 17: தமிழ்நாட்டில் வடகிழக்கு மருவ மழை நேற்று முன்தினம் தொடங்கியது. முன்னதாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரணமாக மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் விட்டு கன மழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் குப்பம் முதல் கோவளம் மீனவர் குப்பம் வரை கடல் சீற்றமாக காணப்படுவதால், மாமல்லபுரம் உள்ளிட்ட மீனவர்கள் யாரும் 2 நாட்களாக கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். சில மீனவர் கிராமங்களில் காற்றில் படகுகள் அடித்துச் செல்லாமல் இருக்க கயிறு மூலம் கட்டி வைத்துள்ளனர். இந்தநிலையில், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், கன மழை பெய்தால் மீனவர்கள் மற்றும் இருளர்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

The post மாமல்லபுரம் மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,North- ,Tamil Nadu ,Chennai ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில் செல்லும்...