×

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 35 ஏரிகள் தொடர் மழையால் நிரம்பின

காஞ்சிபுரம், அக். 16: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழையால் 35 ஏரிகள் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அந்த வகையில், நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் என பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி ஆகிய 5 ஏரிகள் நிரம்பியுள்ளன.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளை பட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைப்புத்தூர் ஏரி, விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கல், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி என செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 ஏரிகள் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஏரிகள் என மொத்தம் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்தநிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விவசாயத்திற்கு முக்கியமான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு விபரம் வருமாறு காஞ்சிபுரம் 29.40 மிமீ, உத்திரமேரூர் 24.40, வாலாஜாபாத் 23.00, பெரும்புதூர் 40.20, குன்றத்தூர் 64.50, செம்பரம்பாக்கம் 76.40 மிமீ என மழை பதிவாகியுள்ளது.

நிரம்பி வழியும் பாலாற்று தடுப்பணை
தொடர் மழைக்காரணமாக, வாயலூர் பாலாற்று தடுப்பணை நிரம்பி வழிகிறது. வட கிழக்கு பருவ மழை கடந்த இரு தினங்களாக பெய்து வந்தநிலையில் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 97 ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன. அதேபோல், ஒன்றியத்திற்குட்பட்ட பாலாற்றில் மழைநீர் வழிந்தோடுவதால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வாயலூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தோடுகிறது. இந்த உபரி நீர் கடலில் கலக்கிறது. கன மழை எதிரொலி காரணமாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்ட நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மேலும், மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 35 ஏரிகள் தொடர் மழையால் நிரம்பின appeared first on Dinakaran.

Tags : Kanchipuram-Chengalpattu district ,Kanchipuram ,Chengalpattu ,Tamil Nadu ,Chennai ,Thiruvallur ,
× RELATED சென்னையில் கனமழையால் தேங்கிய 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றம்