×

ஐப்பசி மாத மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: மேல்சாந்திகள் தேர்வு நாளை நடக்கிறது

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை மற்றும் மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்திகளின் (தலைமை பூசாரி) பொறுப்புக்காலம் ஒரு ஆண்டு ஆகும். தற்போது மேல்சாந்திகளாக இருப்பவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதற்கிடையே புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் சபரிமலைக்கு 25 பேரும், மாளிகைப்புரத்திற்கு 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தலா ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

நாளை காலை 7 மணியளவில் சபரிமலை சன்னிதானத்தில் வைத்து புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் கார்த்திகை 1ம் தேதி முதல் சபரிமலையில் பூஜைகளை தொடங்குவார்கள்.  அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்களது தலைமையில் தான் சபரிமலையில் முக்கிய பூஜைகள் நடக்கும். இதற்கிடையே ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

மீண்டும் சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மறுநாள் 31ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டலகால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும்.

The post ஐப்பசி மாத மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: மேல்சாந்திகள் தேர்வு நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Sabarimalai Ayyappan Temple ,Kerala ,Sabarimalai ,Malikipurathamman Temple ,Sabarimala Ayyappan Temple Walk ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு...