×

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் கேண்டீனுக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?.. காவல்துறையினர் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் செயல்படும் போலீஸ் கேண்டீனுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது 33 காவல் நிலையங்கள் மற்றும் நான்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்கள் அனைத்தும் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 5 துணை போலீஸ் சரகங்களாக (சப் டிவிஷன்) பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் மார்த்தாண்டம் சப் டிவிஷன் சமீபத்தில் தான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தவிர எஸ்.பி. அலுவலகம் தனியாக இயங்கி வருகிறது. இங்கு எஸ்.பி. தனிப்பிரிவு, சைபர் க்ரைம், ஏடிஎஸ்பி அலுவலகங்கள், மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவு, மனித உரிமை காவல்துறை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.

இது மட்டுமின்றி, எஸ்.பி. அலுவலகத்தில் தான் காவல்துறைக்கான நிர்வாக பிரிவு அலுவலகங்களும் உள்ளன. இதே போல் ஆயுதப்படை முகாம், நாகர்கோவில் மறவன்குடியிருப்பு மைதானத்தில் உள்ளது. இங்கு போலீஸ் குடியிருப்புகள் உள்பட பல்வேறு பிரிவு அலுவலகங்களும் உள்ளன. போலீஸ் பயிற்சி பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த ஆயுதப்படை முகாமில் தான் போலீஸ் கேண்டீனும் செயல்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசார், ஆயுதப்படை, அதிரடிப்படையில் உள்ளவர்கள் மற்றும் காவல் துறை சார்பில் பிற அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் வரை இந்த கேண்டீனில் தான் அத்தியாவசிய பொருட்களை வாங்குகிறார்கள். இந்த கேண்டீன் பழமையான சிறிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் போதுமான அளவு பொருட்கள் வைக்க முடிய வில்லை.

குடோன் போல் அத்தியாவசிய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டு இருக்கின்றன. மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் மட்டும் தான், கேண்டீன் உள்ளது. இதனால் கொல்லங்கோடு, பளுகல், அருமனை, களியக்காவிளை உள்ளிட்ட எல்லையோர காவல் நிலையங்களில் உள்ள போலீசார் இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்ல ஒரு நாள் முழுவதும் வீணாகி விடுகிறது. எப்போதாவது தான் காவல் துறையில் விடுமுறை கிடைக்கிறது. அன்றைய தினமும் கேண்டீனுக்கு வந்து பொருட்கள் வாங்கவே நேரம் சரியாகி விடுகிறது என போலீசார் புலம்புகிறார்கள். ஏற்கனவே மார்த்தாண்டத்தை மையமாக வைத்து புதிய ஆயுதப்படை மைதானம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், தக்கலை அல்லது மார்த்தாண்டத்தில் போலீஸ் கேண்டீன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பலர் அரசுக்கு பரிந்துரை கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இதுவரை புதிய ஆயுதப்படை மைதானம் , மார்த்தாண்டத்தில் போலீஸ் கேண்டீன் கிளை அமைப்பது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் இல்லை. போலீஸ் கேண்டீன் கிளை அமைக்கப்படா விட்டாலும், தற்போது நாகர்கோவிலில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள கேண்டீனுக்கு புதிய கட்டிட வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். சூப்பர் மார்க்கெட் போல் நவீன வசதிகளுடன் கேண்டீன் அமைத்து, அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து ஓய்வு பெற்றோர் காவலர்கள் நல சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், போலீஸ் கேண்டீனில் போதிய இட வசதி இல்லை. இதனால் பொருட்கள் கொள்முதலும் குறைவாக உள்ளது.

மாதத்தின் முதல் வாரத்திலேயே முக்கியமான பொருட்கள் தீர்ந்து விடும். பின்னர் ஒரு வாரம் வரை காத்திருந்து அந்த பொருட்களை வாங்க மீண்டும் வர வேண்டும். போலீசாரின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே தற்போது பணியில் உள்ள போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் நலன் கருதி, குமரி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள கேண்டீனை நவீனப்படுத்தும் வகையில் புதிய கட்டிடம் அமைத்து அனைத்து வேலை நாட்களிலும் எல்லா பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள போலீசார், ஓய்வு பெற்ற போலீசார் நலனுக்காக மார்த்தாண்டத்தில் போலீஸ் கேண்டீன் தொடங்க வேண்டும் என்றனர்.

The post நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் கேண்டீனுக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?.. காவல்துறையினர் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil Armed Forces Ground ,Nagercoil ,Nagercoil Armed Forces ,Kumari ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில்...