×

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த கருவாட்டு குடோனில் பதுக்கிய 2.4 டன் விரலி மஞ்சள் பறிமுதல்: மரைன் போலீசார் அதிரடி


தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி கருவாட்டு குடோனில் பதுக்கிய 2.4 டன் விரலி மஞ்சள் மூடைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார மந்தம், இன்னும் மாறவில்லை. அங்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் பன்மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில், தூத்துக்குடி, ராமேஸ்வரம், வேதாரண்யம் உள்ளிட்ட கடற்பகுதிகளிலிருந்து இலங்கைக்கு சிலர் அத்தியாவசிய பொருட்களை கடத்தி கூடுதலாக லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள கருவாட்டு குடோனில், இலங்கைக்கு கடத்துவதற்காக விரலி மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி மரைன் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் எஸ்ஐ முத்துமாரி தேவேந்திரர் மற்றும் போலீசார் தாளமுத்துநகர், கோமாஸ்புரம் பகுதியில், விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான கருவாட்டு குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த குடோனின் ஒரு பகுதியில் விரலி மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது, தெரியவந்தது. இதையடுத்து அங்கு நீர் புகாதவாறு பாலிதீன் பைகளில் பேக் செய்யப்பட்ட தலா 40 கிலோ எடை கொண்ட 60 மூடைகளில் இருந்த 2.4 டன் விரலி மஞ்சளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்போது மரைன் போலீசாரை பார்த்ததும், அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். விசாரணையில் இந்த விரலி மஞ்சள் ஈரோடு மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டு, பேக்கிங் செய்து, தூத்துக்குடி கடல் வழியாக, இலங்கைக்கு கடத்த இருந்தது, தெரியவந்தது. இதன் இலங்கை மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட விரலி மஞ்சள் மூடைகளை மரைன் போலீசார், தூத்துக்குடி சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்த முயன்ற சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த கருவாட்டு குடோனில் பதுக்கிய 2.4 டன் விரலி மஞ்சள் பறிமுதல்: மரைன் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kudon ,Thoothukudi ,Lanka ,Marine Police Action ,Tuthukudi Kurowatu Kudon ,Sri Lanka ,Embryo Kudon ,
× RELATED குடோனில் போதை பொருட்கள் பறிமுதல் டீக்கடையில் குட்கா விற்பனை