×

பருவமழை தொடங்க 6 நாட்கள் உள்ள நிலையில் சென்னையை மீண்டும் பேரிடரில் தள்ளக்கூடாது : அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: “வடகிழக்குப் பருவமழை வரும் 15ம் தேதி தொடங்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள்ளாக போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நிறைவு செய்ய வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சென்னையை மீண்டும் பேரிடரில் தள்ளாமல் தடுக்க அரக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு ஆண்டில் இயல்பை விட அதிகமாக வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மாநகரம் கடந்த பத்தாண்டுகளாகவே ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையின் போது பேரிடர்களை எதிர்கொள்வது வாடிக்கையாகி விட்டது. 2021 ஆம் ஆண்டில் மிக மோசமான வெள்ளத்தையும், உயிரிழப்பு மற்றும் உடமையிழப்புகளையும் சென்னை மாநகரம் எதிர்கொண்டது.

அதைத் தொடர்ந்து சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய இ.ஆ.ப. அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022 ஆம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதியும் தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.திருப்புகழ் குழு பரிந்துரைப்படி வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடத்திலும் வெள்ள நீர் தேங்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் கூறினார்கள். கடந்த ஆண்டு திசம்பர் மாதத் தொடக்கத்தில் செய்த மழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.இந்த ஆண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் சென்னை மாநகர மக்கள் பேரிடரை எதிர்கொள்ளாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

சென்னையில் வேளச்சேரி, தரமணி, ஈக்காட்டுத்தாங்கல், விருகம்பாக்கம், நெற்குன்றம், வளசரவாக்கம், இராமாபுரம், ஆலப்பாக்கம், திருவி.க. நகர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், மணலி உள்ளிட்டஇடங்களில் மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. எனவே வடகிழக்குப் பருவமழை வரும் 15 ஆம் தேதி தொடங்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள்ளாக போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நிறைவு செய்ய வேண்டும். இன்னொரு பேரிடரில் இருந்து மக்களைக் காக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

The post பருவமழை தொடங்க 6 நாட்கள் உள்ள நிலையில் சென்னையை மீண்டும் பேரிடரில் தள்ளக்கூடாது : அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED டெல்லியில் பிப்ரவரியில் பேரவை...