×

சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான 699 மெட்ரிக் டன் உரம் ரயிலில் வருகை * 22,939 மெட்ரிக் டன் உரம் கையிருப்பில் உள்ளது * வேளாண் இணை இயக்குநர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு

திருவண்ணாமலை, அக்.9: திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான 699 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் நேற்று கொண்டு வரப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. அது தவிர மணிலா, கரும்பு, உளுந்து போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கான, 22,939 மெட்ரிக் டன் உரங்கள் தற்போது வேளாண் துறை மூலம் கையிருப்பு வைக்கப்பட்டு, தேவையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவம் தொடங்கியுள்ளதால் நெல், நிலக்கடலை, உளுந்து, கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்களான யூரியா 11417 மெ.டன், டிஏபி 1908 மெ.டன், பொட்டாஷ் 1017 மெ.டன், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 640 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 7957 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஆதார் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் தேவைக்காக பாக்டம்பாஸ் உரம் 699.200 மெ.டன் கொச்சியிலிருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரயில் மூலம் நேற்று கொண்டு வரப்பட்டது. அதனை, உர விற்பனை நிலையங்கள் மற்றும் உரக்கிடங்குளில் இருப்பு வைக்க லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை வேளாண் இயக்குனர் (பொறுப்பு) கண்ணன், உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) ராம் பிரபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, வேளாண்மை இணை இயக்குநர் கூறுகையில், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி, விதிமீறல்களை தடுக்கும் வகையில் வட்டார அளவில் உர விற்பனை நிலையங்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்திடவும், இருப்பு சரியாக வைத்திடவும் விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யாமல் தடுக்கவும் வட்டார உர ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். உரக்கட்டுப்பாட்டு ஆணையை மீறி செயல்படும் உர விற்பனை நிலையங்களின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

The post சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான 699 மெட்ரிக் டன் உரம் ரயிலில் வருகை * 22,939 மெட்ரிக் டன் உரம் கையிருப்பில் உள்ளது * வேளாண் இணை இயக்குநர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு appeared first on Dinakaran.

Tags : Samba ,Agriculture ,Tiruvannamalai District ,Thiruvannamalai ,Manila ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED சம்பா பருவம் தொடங்கிய நிலையில்...