×

மகளிர் டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

துபாய்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானுடன் நேற்று மோதிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன் மட்டுமே எடுத்தது.

நிடா தார் அதிகபட்சமாக 28 ரன் (34 பந்து, 1 பவுண்டரி), முனீபா அலி 17, கேப்டன் பாத்திமா சனா 13 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர் (2 பேர் டக் அவுட்). சைதா அரூப் ஷா 14 ரன், நஷ்ரா சாந்து 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி 4 ஓவரில் 19 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஷ்ரேயங்கா பட்டீல் 2, ரேணுகா சிங், தீப்தி ஷர்மா, ஆஷா சோபனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா இணைந்து துரத்தலை தொடங்கினர். மந்தனா 7 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். பொறுப்புடன் விளையாடிய ஷபாலி 32 ரன் (35 பந்து, 3 பவுண்டரி), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 23 ரன் எடுக்க, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன் எடுத்து காயம் காரணமாக ஓய்வு பெற்றார்.

இந்தியா 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. தீப்தி ஷர்மா 7 ரன், சஜீவன் சஜனா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. அருந்ததி ரெட்டி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். முதல் போட்டியில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்த இந்தியா, 2வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. அடுத்து 3வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியின் சவாலை எதிர்கொள்கிறது.

The post மகளிர் டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Women's T20 World Cup ,India ,Pakistan ,Dubai ,ICC Women's World Cup T20 Series A League ,Dinakaran ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலக...