×

சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் கடந்த கொரோனா ஊரடங்கின்போது சவூதியின் ஜெட்டா நகருக்கு நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது நேற்று முதல் சென்னை விமானநிலையத்தில் இருந்து மீண்டும் சவூதியின் ஜெட்டாa நகருக்கு வாரத்தில் 2 நாட்கள் நேரடி விமான சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்னையில் இருந்து ஏற்கெனவே நீண்ட காலமாக நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கை முன்னிட்டு, அதே ஆண்டு மார்ச் மாதத்துடன் சென்னை-ஜெட்டா நேரடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அதன்பின் உலகெங்கிலும் சகஜநிலை திரும்பியும், சென்னை-ஜெட்டா-சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவை துவங்கப்படவில்லை.எனினும், சென்னையில் இருந்து இஸ்லாமிய மக்களின் புனித ஸ்தலமான மெக்கா, மதினாவுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இதனால், சென்னை மற்றும் ஜெட்டா நகருக்கு இடையே மீண்டும் நேரடி விமான சேவையைத் துவக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை மற்றும் சவூதியின் ஜெட்டா நகருக்கு இடையே நேற்று முதல் சவூதியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், வாரத்தில் திங்கள் மற்றும் புதன் ஆகிய 2 நாட்களுக்கு நேரடி விமான சேவையைத் துவக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில், கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் இருந்து சவூதியின் ஜெட்டா நகருக்கு நேற்று மாலை நேரடி விமான சேவை துவங்கியது. முதல் நாளான நேற்று இந்திய நேரப்படி மதியம் 12 மணியளவில் சவூதியின் ஜெட்டா நகரிலிருந்து 132 பயணிகளுடன் சவூதியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் சென்னையில் மாலை 5.15 மணியளவில் தரையிறங்கியது. அதில் வந்திறங்கிய பயணிகளை ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், அதே விமானம் இரவு 7 மணியளவில் 222 பயணிகளுடன் மீண்டும் ஜெட்டா நகருக்குப் புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து சவூதியின் ஜெட்டா நகருக்கு இடையே செல்லும் நேரடி விமானத்தின் பயண நேரம் 5 மணி, 30 நிமிடங்கள். தற்போது வாரத்தில் திங்கள், புதன் ஆகிய 2 நாட்களுக்கு இயக்கப்படும் நேரடி விமான சேவை, மிக விரைவில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இருந்து ஜெட்டா நகருக்கு மீண்டும் நேரடி விமான சேவை துவங்கியதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

The post சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Jetta, Saudi ,Chennai ,Saudi ,Jetta ,Corona ,lockdown ,Chennai Airport ,Saudi city ,Jetha ,
× RELATED ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம்; 2 வது நாளாக இன்றும் நடைபெறுகிறது