சென்னை: சென்னையில் இருந்து விமானம் மூலம், தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கேரள தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜாமுதீன் கபீர் (24). இவர் மீது திருச்சூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், கடந்த மார்ச் மாதம் மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து திருச்சூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நிஜாமுதீன் கபீரை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
அதோடு நிஜாமுதீன் கபீர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதையடுத்து திருச்சூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நிஜாமுதீன் கபீரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசியும் போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நிஜாமுதீன் கபீர் வெளி மாநிலங்களுக்குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் செல்லும், ஏர் ஏசியா பயணிகள் விமானம், புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கேரள மாநில தலைமறைவு குற்றவாளி நிஜாமுதீன் கபீர், இந்த விமானத்தில் பயணிக்க வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள், கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது, இவர் கடந்த 6 மாதங்களாக கேரள போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்று தெரிய வந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், அவரை சுத்தி வளைத்து பிடித்தனர். அதோடு அவருடைய பாங்காக் விமான பயணத்தையும் ரத்து செய்தனர். மேலும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்து, காவலில் வைக்கப்பட்டார். அதோடு குடியுரிமை அதிகாரிகள் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இந்த தகவலை தெரிவித்தனர். பின்னர் கேரளாவில் இருந்து தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். இந்த சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற கேரள தலைமறைவு குற்றவாளி கைது appeared first on Dinakaran.