அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தை பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டும் என, தென் மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரி வந்தனர். சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டுமெனில், அந்த விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதுடன், அதற்கேற்ற வகையில் பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டியது அவசியம். இதன்படி தற்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள், சுங்க இலாகாவினர் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் உள்ளிட்டோர் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, மதுரை விமான நிலையம் வரும் அக்.1 முதல் 24 மணி நேரமும் செயல்படும். இந்தியாவில் செயல்படும் விமான நிறுவனங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும், விமான நிலைய ஆணையம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அக்.29 முதல் மார்ச் 31 வரை விமான நிறுவனங்களின் குளிர்கால போக்குவரத்து அட்டவணை வெளியாகும். இதில், மதுரையில் இருந்து சேவை வழங்க விமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு உள்ளூர் விமான சேவைகளும், துபாய், கொழும்பு, சிங்கப்பூருக்கு வெளிநாட்டு சேவைகளும், மதுரையில் இருந்து தினந்தோறும் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கோலாலம்பூர், பஹ்ரைன், சார்ஜா, அபுதாபி, பாங்காக் உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கும், உள்நாட்டில் மேலும் பல நகரங்களுக்கும் மதுரையில் இருந்து விமான சேவை தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக தெரிகிறது.
The post மதுரை ஏர்போர்ட் 24 மணி நேரமும் இயங்கும்: அக்.1 முதல் அமல் appeared first on Dinakaran.