×
Saravana Stores

ரூ.1 கோடியே 60 லட்சத்தை ஐகோர்ட் பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிட கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பியூயல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து 6 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு சென்னையைச் சேர்ந்த பியூயல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் வாங்கியிருந்தது.

இதில் இரண்டு படங்கள் தயாரிக்கப்படாததால் 5 கோடி ரூபாயை பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில், மீதம் உள்ள ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாயை திருப்பி வழங்காமல் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், இத்தனை ஆண்டுகள் காத்திருந்த நிலையில் நாளை மறுநாள் (நாளை) படம் வெளியாக உள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் தொடரப்பட்டுள்ளது என்றனர்.

இதனையடுத்து, பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய அசல் தொகையான ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, பணத்தை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சொத்தாட்சியரிடம் ரூ.20 கோடியை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கிலும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் கங்குவா படத்தை வெளியிடுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

* சிறப்புக் காட்சிக்கு அனுமதி
கங்குவா படத்துக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட தயாரிப்பு நிறுவனம் அரசை கோரியிருந்தது. இதையடுத்து, ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகும் நாளான வரும் நவ.14ம் தேதியன்று, காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

The post ரூ.1 கோடியே 60 லட்சத்தை ஐகோர்ட் பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிட கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Chennai High Court ,Thana ,Dinakaran ,
× RELATED மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை...