×

பெரியபாளையம் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள பணிமனை பேருந்து நிலையம் அமைக்கும் பணி: விரைவில் ெதாடங்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை, செப். 26: அமணம்பாக்கத்தில் கிடப்பில் கிடக்கும் மாநகர பஸ் பனிமனை மற்றும் பஸ் நிலையம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, அமணம்பாக்கம் ஊராட்சி தாமரைப்பாக்கம் பகுதியில் விவசாயிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும். இந்த ஊரைச் சுற்றி அமணம்பாக்கம், வெங்கல், மாகரல், புன்னப்பாக்கம் பாகல்மேடு, செம்பேடு, கொமக்கன்பேடு, சேத்துப்பாக்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு வந்து அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி, வேலை சம்மந்தமாகவும் செல்வார்கள்.

இதற்காக, இந்த பகுதி மக்கள் விழுப்புரம் கோட்ட பஸ்களிலும், மாநகர பஸ்களிலும் செல்வார்கள். ஆனால், விழுப்புரம் கோட்ட பஸ்கள் போதிய அளவு இல்லை. ஆவடி, திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மாநகர பஸ்களும் போதிய அளவு இல்லை. இதனால், தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் மாநகர பஸ் பணிமனை மற்றும் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தாமரைப்பாக்கம் அருகில் அமணம்பாக்கம் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள இடத்தில் மாநகர பஸ் பணிமனை மற்றும் மாநகர பஸ் நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதன்பேரில், போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து 5 1/2(ஐந்தரை) ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து பெயர் பலகை வைத்து விட்டு சென்றனர். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பஸ் பணிமனை வேலையை இதுவரை தொடங்கவில்லை. விரைவில் பணிகள் தொடங்குமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது: தாமரைப்பாக்கம் பகுதியில் மாநகர பஸ் பணிமனையும், பஸ் நிலையமும் அமைந்தால் வியாபாரிகளான எங்களுக்கும் எங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கும் தேவையான பொருட்களை நேரடியாக பாரிமுனைக்கு சென்று வாங்கி வர வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் தாமரைப்பாக்கத்திலிருந்து செங்குன்றம் சென்று, அங்கிருந்து கோயம்பேடு, பாரிமுனை பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட மாநகர பஸ் பணிமனை மற்றும் பஸ் நிலையம் அமைத்தால் உதவியாக இருக்கும். மேலும், பஸ் பணிமனை வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் செய்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை என்றனர். எனவே பணிமனை வேலையை விரைந்து தொடங்க வேண்டும் என கூறினர்.

The post பெரியபாளையம் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள பணிமனை பேருந்து நிலையம் அமைக்கும் பணி: விரைவில் ெதாடங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED தண்ணீர் லாரி மோதியதில் மருத்துவமனை ஊழியர் பலி