×

மாவட்டத்தில் 426 பயனாளிகளுக்கு ரூ.12.15 கோடியில் அரசின் நலத்திட்ட உதவி

*சுற்றுலா துறை அமைச்சர் வழங்கினார்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 426 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் மூலம் ரூ.12.15 கோடி மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை சுற்றுலா துறை அமைச்சர் வழங்கினார். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 426 பயனாளிகளுக்கு ரூ.12.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பொதுமக்களின் நலன் கருதி, ஒவ்வொரு துறையின் வாயிலாக பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, அனைத்து மாவட்டத்திலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் மூலமாக தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று (நேற்று) நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு (தலா ரூ.5.73 லட்சம்) ரூ.5.73 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு பயனாளிகளுக்கு ரூ.14,560 மதிப்பில் சலவைப்பெட்டிகளையும், 1 பயனாளிக்கு ரூ.6690 மதிப்பில் தையல் இயந்தரமும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் 115 பயனாளிகளுக்கு (தலா ரூ.3.50 லட்சம்) ரூ.4.02 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.20 கோடி கடனுதவிகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரத்து 300 மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

20 மாணவர்களுக்கு ரூ.96 ஆயிரத்து 600 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளும், சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலான வைப்பு பத்திரங்களும், 10 மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 பெறும் வகையில் வங்கி பற்றட்டைகளும் வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் ரூ.8 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தோட்டக்கலைத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.15524 மதிப்பில் நுண்ணீர் பாசன கருவியும், இரண்டு விவசாயிகளுக்கு சிப்பம் கட்டும் அறைக்காக ரூ.4 லட்சம் மதிப்பிலான மானியத்தொகை வழங்கப்பட்டது. மேலும், ஒரு விவசாயிக்கு பசுமை குடில் அமைக்க ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மானிய தொகையும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு மண்புழு உரக்கூடாரம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 106 பயனாளிகளுக்கு ரூ.5.30 லட்சம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு சாலை விபத்து நிவாரண நிதியாக ரூ.1 லட்சமும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பில் மருந்து பெட்டகங்களும், 5 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 997 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர நாற்காலியும், 5 பயனாளிகளுக்கு ரூ.8250 மதிப்பில் நவீன ஒளிரும் மடக்குகுச்சியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 5 பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரத்து 200 மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும் என மொத்தம் 426 பயனாளிகளுக்கு ரூ.12.15 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின்கீழ் வீடு வழங்கக்கோரி நேரடியாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் மனு அளித்த முள்ளிகூர் ஊராட்சிக்குட்பட்ட கொடமரா பகுதியைச் சேர்ந்த ஜஸ்வர்யா பாபுவிற்கு, கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின்கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி முடித்து, அதற்கான சாவி வழங்கப்பட்டது.

மேலும், நமது மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ், 10 ஆயிரத்து 700 மாணவ, மாணவிகளுக்கும், புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் 1202 மாணவியர்களும், தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் 982 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர். அதேபோல், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 9157 நபர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, 582 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் 1.127 லட்சம் மகளிர்களும், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 4633 நபர்களும் பயன்பெற்றுள்ளனர்.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 5.96 லட்சம் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக நோயாளிகள் உயர்சிகிச்சை பெற அருகிலுள்ள கோவை மாவட்டம் அல்லது கேரளா மாநிலத்திற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார்கள்.

தற்போது, ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக பல்வேறு உபகரணங்கள் உள்ளதால் இனி உயர் சிகிச்சைக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் 2030க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்துவதற்காக பல்வேறு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். எனவே, ஒவ்வொரு துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை ஏழை, எளிய பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் பேசினார்.

விழாவில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி, நகரமன்றத்தலைவர்கள் வாணீஸ்வரி (ஊட்டி, பரிமளா (கூடலூர்), நகரமன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் மாயன் (எ) மாதன், கீர்த்தனா, திட்டக்குழு உறுப்பினர்கள் ஜார்ஜ், உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post மாவட்டத்தில் 426 பயனாளிகளுக்கு ரூ.12.15 கோடியில் அரசின் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Tags : Tourism Minister ,Ooty ,Nilgiri district ,Ooty Tribal Cultural Center ,Dinakaran ,
× RELATED மார்க்கெட் நடைபாதையில் மீண்டும் தடுப்புகள் அமைக்க கோரிக்கை