×

போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக கூறி சென்னையில் 8 மாதத்தில் தொழிலதிபர்கள், பெண்களை மிரட்டி ரூ.132 கோடி பணம் பறிப்பு: பொதுமக்கள் உஷாராக இருக்க கமிஷனர் அருண் எச்சரிக்கை

சென்னை: உங்கள் பெயரில் போதை பொருள் பார்சல் வந்துள்ளதாக கூறி சென்னையில் கடந்த 8 மாதத்தில் ரூ.132.46 கோடி பணம் பறித்தது தொடர்பாக 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பெட்டெக்ஸ், புளுடார்ட் கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதாக தொடர்பு கொண்டு, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு புலித்தோல், போதை பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், போலி பாஸ்போர்ட்டுகள் பார்சல் வந்து இருப்பதாகவும் அல்லது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறி, உங்கள் செல்போன் எண்ணை பயன்படுத்தி பல வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன்மூலம் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பறிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், அதுதொடர்பாக மும்பை சைபர் க்ரைம் போலீஸ், சிஐபி விசாரணை செய்ய வேண்டியிருப்பதாக கூறி போன் அழைப்பை மற்றொரு நபருக்கு பார்வேர்டு செய்வார்கள்.

பின்னர் எதிர்முனையில் பேசுபவர் காவல்துறை அதிகாரி போல் ஸ்கைப், வாட்ஸ் அப், சிக்னல் போன்ற இணையதள ஆப்பை நம்முடைய செல்போனில் பதிவிற்றம் செய்ய சொல்லி அதன் மூலம் சீருடை அணிந்து கொண்ட உங்கள் சேமிப்பு கணக்கை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி மிரட்டி, எதிர்முனையில் பேசும் நபர்கள் அனுப்பும் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றிவிட வேண்டும் என்று மிரட்டுவார்கள். அந்த பணத்தை ஆய்வு செய்த பிறகு உங்களுக்கு மறுபடியும் அனுப்புவோம் என்று கூறி பணத்தை பறித்து கொள்வார்கள். பலர் இதுபோன்ற மோசடி நபர்களை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி நபர்களுக்கு அனுப்பி விடுவார்கள்.

பணம் பெற்ற உடனே மோசடி நபர்கள் அவர்கள் அனுப்பிய அனைத்து மெசேஜிகளையும் அழித்து விடுவார்கள்.இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டதாக சென்னை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இந்த வருடத்தில் மட்டும் 132 கோடியே 46 லட்சத்து 34 ஆயிரத்து 766 ரூபாய் பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர். இதுதொடர்பாக வந்த புகார்களின் படி மொத்தம் 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இத்தகைய மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சில அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

அதன் விவரம்:
* எந்தவொரு மாநில காவல் துறையோ, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளோ இதுபோன்று ஸ்கைப், வாட்ஸ் அப், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் அழைத்து விசாரணை செய்வதில்லை.
* சந்தேக நபர்களிடமிருந்து அழைப்புகள் வந்தால் அந்த எண்களை உடனடியாக நிராகரித்து விடுங்கள் அல்லது முடக்கம் செய்ய வேண்டும்.
* பொதுமக்கள் அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
* முன்பின் தெரியாத நபர்களிடம் நம்முடைய தனிப்பட்ட வங்கி சார்ந்த மற்றும் பணம் இருப்பு விவரங்கள், கடவுச்சொற்கள், ஓடிபி எண்களை தெரிவித்து அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப வேண்டாம்.
* பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக சென்னை பெருநகர காவல் துறையில் 4 இணை ஆணையாளர் அலுவலகங்கள் அமைந்துள்ள பரங்கிமலை, சேத்துப்பட்டு காவல் நிலையம், அண்ணாநகர் காவல் நிலையம், தண்டையார்பேட்டை காவல் நிலையம் மற்றும் 12 காவல் துணை கமிஷனர்கள் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் க்ரைம் காவல் நிலையம் மற்றும் சைபர் க்ரைம் குழுக்கள் ஆகியவற்றை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.
* சைபர் குற்றங்கள் மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் க்ரைம் உதவி எண் 1930 மற்றும் இணையதள முகவரி https:\\\\ybercrime.gov.in ல் புகார் தெரிவிக்கலாம்.
* இதுபோன்ற நிகழ்வுகளில் அவசர உதவி தேவையிருந்தால் அவசர உதவி எண் 100 ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக கூறி சென்னையில் 8 மாதத்தில் தொழிலதிபர்கள், பெண்களை மிரட்டி ரூ.132 கோடி பணம் பறிப்பு: பொதுமக்கள் உஷாராக இருக்க கமிஷனர் அருண் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner ,Arun ,Police Commissioner ,Metropolitan Police Commissioner ,
× RELATED ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின்...