×

கருங்கல் அருகே இன்று கன்டெய்னர் லாரி சிறை பிடிப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு


கருங்கல்: புதுக்கடையில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் ஒரு கன்ெடய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. கண்ணன்விளை பகுதியில் சென்றபோது லாரியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் டிரைவரிடம் லாரியில் என்ன கொண்டு செல்லப்படுகிறது என கேட்டனர். அதற்கு டிரைவர் லாரியில் லோடு ஏற்றி திருநெல்வேலி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது என கூறினார். அவருடைய பதிலை ஏற்காத பொதுமக்கள் இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் சம்பவ இடத்துக்கு போலீசார் உடனடியாக செல்லவில்லையாம். இதையடுத்து பொதுமக்கள் பாலூர் ஊராட்சி தலைவர் அஜித்குமார், திப்பிரமலை முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமணி ஆகியோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து ஊராட்சி தலைவர் அப்பகுதிக்கு சென்றார். சுமார் ஒரு மணி நேரமாகியும் போலீசார் வராததால் ஊராட்சி தலைவர் பொதுமக்களுடன் இணைந்து கன்டெய்னர் லாரியை சிறைபிடித்ததுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் லாரியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரத்துறை மூலம் சோதனை செய்ய வேண்டும் என்றனர். தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்றனர். அவர்கள் லாரிகளில் இருந்த பெட்டிகளை திறந்து சோதனை செய்தனர். அப்போது ஏராளமான பெட்டிகளில் சுமார் 5 டன் அளவுக்கு கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவை குமரி மாவட்டத்தில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது உரத்துக்கு கொண்டு வந்ததா? என டிரைவரிடம் விசாரித்தனர். இதுகுறித்து பாலூர் ஊராட்சி தலைவர் அஜித்குமார் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்ததுடன் உண்மை நிலையை அறிய டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கருங்கல் அருகே இன்று கன்டெய்னர் லாரி சிறை பிடிப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karungal ,Pudukadadi ,Kannanvilai ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் வழங்க...