சென்னை: தமிழ்நாட்டை அனைத்திலும் சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்ட நம்மால் முடியும். எனவே, எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரமும் கிடைக்க சட்ட நடவடிக்கைகளை திமுக முன்னெடுக்கும் என சென்னையில் நேற்று நடந்த திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் கூறினார்.
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்.15ம் தேதி ‘பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், திமுக முப்பெரும் விழா, பவள விழா நிறைவு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினர். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் விருது மற்றும் பரிசுகள் வழங்கினார்.
இதில் இயற்கை விவசாயியான 108 வயது மூதாட்டி பாப்பம்மாளுக்கு பெரியார் விருது, திமுக மூத்த உறுப்பினரான அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு அண்ணா விருது, முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பிக்கு கலைஞர் விருது, திமுக தீர்மானக் குழு தலைவர் கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருது, முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜனுக்கு பேராசிரியர் விருது, முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டது.
மேலும், கலைஞர் அறக்கட்டளை சார்பில் திமுக விருதுக்காக தமிழகத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாக கட்சி பணியாற்றிய தலா ஒருவருக்கு நற்சான்று, பண முடிப்பு ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, விருது பெற்றவர்களுடன் அவர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு, கடந்த 14ம் தேதிதான் சென்னைக்கு திரும்பினேன். பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளும் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் கிடைக்க இருக்கிறது.
அமெரிக்கவாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பு என்பது இந்தியாவின் மற்ற மாநில மக்களும் சமூக ஊடகங்களில் வியந்து பேசும் அளவுக்கு ‘ரீச்’ ஆனது. 1966ம் ஆண்டு என்னுடைய 13 வயதில்-கோபாலபுரம் இளைஞர் திமுகவை தொடங்கி- 58 ஆண்டுகாலம் இயக்கத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்த உழைப்புக்கான அங்கீகாரம் தான் இன்று பவள விழா காணும் திமுகவுக்கு நான் தலைவராக இருப்பது. பவளவிழா ஆண்டான இந்த ஆண்டு முதல் எனது பெயரிலான விருது ஆறாவதாக சேர்க்கப்பட்டுள்ளது.
1977ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்றபோது, இத்துடன் திமுக முடிந்தது எனச் சில ஊடகங்கள் எழுதினார்கள். அப்போது கலைஞர் சொன்னார்…. “கருணாநிதியின் வாழ்வே முடிந்துவிட்டாலும்; கழகத்தின் வாழ்வு முடியாது என்ற அளவுக்கு வலிமை வாய்ந்த அமைப்புமுறையைக் கொண்டது திமுக’ என்றார். தலைவன், தொண்டன் என இல்லாமல் அண்ணன் – தம்பி என்ற பாச உணர்வுடன் இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டது. 25 வயதைக் கொண்டாடும் வெள்ளி விழா ஆண்டிலும் நமது கழகம் ஆட்சியில் இருந்தது. 50 வயதைக் கொண்டாடும் பொன்விழா ஆண்டிலும் கழகம் ஆட்சியில் இருந்தது.
75 வயதைக் கொண்டாடும் பவளவிழா ஆண்டில் இப்போதும் கழகம் ஆட்சியில் இருக்கிறது. நூற்றாண்டு விழா கொண்டாடும்போதும் திமுக நிச்சயம் ஆட்சியில் இருக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், திமுகவின் தேவை, இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது. கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளைச் செய்துள்ளோம். தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினோம். பல்லாயிரம் ஆண்டு பழமை கொண்ட நம் தாய்மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தோம்.
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், உழவர்கள், நெசவாளர்கள் என விளிம்புநிலை மக்களைக் கல்வியில், வேலைவாய்ப்பில் உன்னத இடத்துக்கு உயர்த்தினோம். எத்தனையோ பள்ளிகள், எத்தனையோ கல்லூரிகள், எத்தனையோ பல்கலைக்கழகங்கள், அத்தனையும் நாம் உருவாக்கியது. சாலைகள், பாலங்கள், அணைகள், நவீன நகரங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள் என உள்கட்டமைப்பு வசதிகள் எல்லாவற்றையும் உருவாக்கித் தமிழ்நாட்டை நோக்கி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் எத்தனை சாதனைகள். மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை. உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம். பணிக்குச் செல்லும் மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து என ஒவ்வொரு தனிமனிதரையும் காக்கும் அரசாக நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. “இத்தனை திட்டங்கள் எந்த மாநிலத்திலும் இல்லை”-எனச் சொல்லத்தக்க வகையில் “எந்த மாநில அரசும் ஒரு மாநிலத்துக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்து தந்ததில்லை” எனச் சொல்லும் அளவுக்கு திமுக அரசு, தமிழ்நாட்டை வளம்மிகுந்த மாநிலமாக மேம்படுத்தியுள்ளது. தொடர்ந்து வளப்படுத்தி வருகிறது.
நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஏராளமான நெருக்கடிகளுக்கு இடையில்தான், தமிழ்நாட்டை எல்லா விதங்களிலும் முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இன்றைக்குக் க்ரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஒரு அறிவிப்பைத்தான் இந்த பவள விழா செய்தியாகச் சொல்ல விரும்புறேன்.
குறைவான நிதிவளத்தைக் கொண்டே, நம்மால் இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடிகிறது என்றால், முழுமையான நிதிவளம் கிடைத்தால், தமிழ்நாட்டை அனைத்திலும் சிறந்த மாநிலமாக மாற்றிக்காட்ட நம்மால் முடியும். எனவே, எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளை திமுக நிச்சயமாக, உறுதியாகச் செய்யும்.
மாநில உரிமைகளுக்காகவும் மாநில சுயாட்சிக் கொள்கைக்காகவும் இந்தியாவில் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஒரே இயக்கம், நம் திமுக மட்டும்தான். ஏனென்றால், மக்களுக்கு நாம் உண்மையாக இருக்கிறோம். அதனால்தான், மக்கள் எப்போதும் நம்முடன் இருக்கிறார்கள். மக்களும் நாமும் ஒன்றாக இருப்பதால்தான் வெற்றியும் நம்முடன் இருக்கிறது. நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர் நம் கலைஞர். உங்களால் நான் தலைமைப் பொறுப்பில் உட்கார வைக்கப்பட்ட பிறகு, எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.
நான் என்றால் தனிப்பட்ட ஸ்டாலின் இல்லை. ஸ்டாலின் என்ற ஒற்றைப் பெயருக்குள், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உழைப்பும் – ஆற்றலும் அடங்கி இருக்கிறது. இந்த வெற்றிகள் எல்லாம், உங்கள் உழைப்பால் உங்கள் தியாகத்தால் உங்கள் செயல்பாடுகளால் உங்கள் நடவடிக்கைகளால்தான் சாத்தியமாயின.இவ்வாறு அவர் பேசினார். திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட எம்பிக்கள், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திரண்டு வந்திருந்ததால் விழா நடந்த இடமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. இதனால், சென்னை மாநகரமே திமுக தொண்டர்களால் திக்குமுக்காடியதை பார்க்க முடிந்தது.
ஏஐ தொழில்நுட்பத்தில் உரையாற்றிய கலைஞர்: வியப்பில் மூழ்கிய தொண்டர்கள்
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நேற்று நடந்தது. இந்த விழா மேடையில் இரண்டு பெரிய நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் ஒரு நாற்காலியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கலைஞர் அமர்ந்து பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றொரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது, ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கலைஞர் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த தொழில்நுட்பம் மூலம் கலைஞர் பேசியதாவது: என் உயிரினும் மேலான என் அன்பு உடன்பிறப்புகளே…தந்தை பெரியார் வடித்த கொள்கையை, அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டி காக்கப்பட்ட இனமான உரசத்தை ஓங்கி ஒலிக்க செய்து கம்பீரமாக திமுகவை ஆட்சி பொறுப்பில் அமர செய்திருக்கும் தம்பி மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி என் மனம் பெருமிதம் கொள்கிறது. ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு, உழைப்பு தான். திமுக கட்சி பணியில் 55 ஆண்டுகளாக கட்சிக்காக அயராது உழைப்பவர்.
திராவிட செம்மலாய், இந்தியாவின் முன்மாதிரி முதல்வராய், நல் உலகம் போற்றும் நாயகராய் விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, இவற்றின் பாதையில் திமுக ஆட்சியை மிகச் சிறப்பாக அவர் வழி நடத்துகிறார். இனமானம், மொழி மானம், சுயமரியாதையை கண் போல் காக்கும் அவரது கடமை உணர்வை கண்டு நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். வாழ்க பெரியார், அண்ணாவின் புகழ் ஓங்குக. திராவிட மாடல் ஆட்சி வளர்க.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விசேஷ ஏற்பாட்டால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். உயிரோடு இருக்கும் போது அவர் எப்படி மேடையில் அமர்ந்து பேசுவாரோ அதேபோன்று கலைஞர் நேரில் பேசியது போன்று இருந்த காட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் பேசி முடித்ததும் தொண்டர்கள் முழக்கம் விண்ணைப் பிளந்தது குறிப்பிடத்தக்கது.
* வாழ்த்தை பாடலாக பாடிய முதல்வர்
முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கழகம் நல்ல கழகம்! நம் திராவிட முன்னேற்றக் கழகம்! அதன் திருப்பணி என்றென்றும் தொடரும்! கல்லக்குடி கொண்டு கன்னித் தமிழ் வென்று உள்ளம் குடிகொண்ட கழகம்! வில்லும் வாளுமின்றி வெல்லும் திறம் கொண்டு வெற்றி பல கண்ட கழகம்! அன்று அறிஞர் வழியில் வந்த கழகம்! பின்னர் கலைஞர் தலைமை தந்த கழகம்! அன்று பிள்ளை நிலவான கழகம்! இன்று பவளவிழா காணும் கழகம்! * கழகம் நல்ல கழகம்! நம் திராவிட முன்னேற்றக் கழகம்!
அதன் திருப்பணி என்றென்றும் தொடரும்! என்னை இப்படி தலைமிர்ந்து முழங்க வைத்த திமுகவின் தீரர்கள் அனைவரும் வாழும் திசையை நோக்கிப் பாசமிகு வணக்கம்! உங்களின் வியர்வையாலும் ரத்தத்தாலும் மூச்சுக்காற்றாலும் உழைப்பாலும்தான் இத்தனை ஆண்டுகாலம் கழகம் கம்பீரமாக நிற்கிறது. அப்படிப்பட்ட தியாகத்தின் உருவமான திமுகவின் தொண்டர்களின் உள்ளத்துக்கும் உங்களது இல்லத்துக்கும் எனது அன்பான வணக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ராகத்தால் பாடல் போன்று தனது பேச்சை தொடங்கினார்.
* அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘பவளவிழா முப்பெரும் விழாப் பொதுக்கூட்டத்தை ஒரு எழுச்சிமிகு மாநாடு போல ஏற்பாடு செய்துள்ளார், மாரத்தான் அமைச்சர் மா.சு! சைதாப்பேட்டை என்பது கலைஞரின் தொகுதி! அதுவும் இரண்டு முறை வென்ற தொகுதி! அந்தத் தொகுதியின் உறுப்பினரான மா.சு.விடம் எந்த பணியைக் கொடுத்தாலும் இரண்டு மடங்கு உத்வேகத்துடன் செய்து காட்டுவார் என்பதற்கு, இந்தப் பவளவிழா நிகழ்ச்சியே சிறந்த எடுத்துக்காட்டு! சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சு.வுக்கும் அவருக்கு தோளோடு தோள் நின்று தொண்டாற்றிய, சென்னை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஒவ்வொருத்தருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
* 2026 தேர்தல் வெற்றியை வரலாறு சொல்ல வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘இதுவரை நடந்த தேர்தல்களை போலவே, அடுத்தடுத்து வரப் போகும் தேர்தல்களிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. கொள்கையைக் காக்கும் படையாக நீங்கள் இருக்கிறீர்கள். நமது தொடர் வெற்றிகள் மூலமாக நூற்றாண்டு விழாவை நோக்கி முன்னேறுவோம். அடுத்து நமது இலக்கு 2026 தேர்தல். இதுவரை இப்படியொரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றதில்லை என 2026ல் வரலாறு சொல்ல வேண்டும். அந்த வரலாற்றை எழுதுவதற்கு நீங்கள் தயாரா? இந்த உணர்வு வெற்றிச் சரிதமாக மாற வேண்டும். அதற்கு இந்த முப்பெரும் விழாவில் உறுதியேற்போம்’’ என்றார்.
The post அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரம்: சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம், திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.