×

அருந்ததியினருக்கு பட்டா வழங்க முதலமைச்சருக்கு திமுக எம்.பி. ஆ.ராசா வலியுறுத்தல்

சென்னை: அருந்ததியர் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆராசா எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். அருந்ததிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிட போதுமான தரிசு நிலங்கள் உள்ளன. ஏற்கனவே எனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தரிசு நிலங்களை கண்டறிந்து வீட்டு மனைப் பட்டா வழங்கி உள்ளோம். மற்ற மாவட்டங்களிலும் தரிசு நிலங்களை கண்டறிந்து அருந்ததிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட வருவாய் மாவட்டங்களில் வசிக்கும் ஆதிதிராவிடர்-அருந்ததியர் மக்களுக்கு போதுமான வாழ்விட வசதிகள் இல்லை என்பதை தங்களின் கவனத்திற்கு பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புக்கள் ஏற்கனவே கொண்டு வந்துள்ளன.

எனது நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அவிநாசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர் பகுதிகளில் உள்ள வருவாய் கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை கண்டறிந்து, 500 க்கும் மேற்பட்ட குடியிருப்பு பட்டாக்களை அரசின் மூலம் ஏற்கனவே வழங்கி உள்ளோம். அதுபோலவே மற்ற மாவட்டங்களிலும் அருந்ததிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட போதுமான அளவு அரசு தரிசு நிலங்கள் உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் தெரிய வருகிறது.

எனவே, இம்மாவட்டங்களில் உள்ள அரசு தரிசு நிலங்களை கண்டறிந்து, கையகப்படுத்தி இப்பகுதியில் கணிசமான அளவு மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் மக்களுக்கு வழங்கிட ஏதுவாக “வருவாய் அலுவலக நிர்வாக அலகு” (Revenue Administrative Unit) ஒன்றை, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் தலைமையில் ஒரு கோட்டாட்சியர் மற்றும் போதுமான வட்டாட்சியர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

தலைமைச் செயலாளர் அல்லது வருவாய் செயலாளர் ஆகியோரின் கண்காணிப்பில் இப்பணிகளை குறித்த காலத்தில் முடித்திடும் வகையில் உரிய ஆணைகள் வழங்கிடவும் அன்புடன் வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post அருந்ததியினருக்கு பட்டா வழங்க முதலமைச்சருக்கு திமுக எம்.பி. ஆ.ராசா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,A. Rasa ,CHENNAI ,Arundhatiyar ,Arasa ,Patta ,Arundhati ,A. Raza ,Dinakaran ,
× RELATED தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி...