×

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு சில இடங்களில் இயல்பைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும். சென்னையில் 2 நாட்களுக்கு 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய ஆய்வின்படி பல்வேறு மாவட்டங்களுக்குட்பட்ட 12 பகுதிகளில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று வானிலை மையம் தரப்பில் தினசரி விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கூடலூரில் 2 செ.மீ. மழையும், ராணிப்பேட்டை பகுதிகளில் 1 செ.மீ. மழையும் பதிவானது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக மதுரையில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை எச்சரிக்கையை பொறுத்தவரை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 23ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் ஒரு சில இடங்களில் 2 முதல் 4 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் எனவும் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,
× RELATED சூரியன் குத்துக்கதிர்கள் நகருவதால்...