×
Saravana Stores

மழை, வெயிலில் நீண்ட நேரம் நிற்பதால் பழுதாகும் பைக்; நாகர்கோவில் ரயில் நிலையத்தில் திறந்த நிலை வாகன பார்க்கிங்: பயணிகள் கடும் கண்டனம்

நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுன் ரயில் நிலையங்களில் மேற்கூரை வசதியுடன் வாகன பார்க்கிங் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், திருவனந்தபுரம் கோட்டத்தில் மிக முக்கியமான ரயில் நிலையமாகும். வருமானத்தின் அடிப்படையில் ஏ கிரேடு பட்டியலில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அமைந்துள்ளது. தற்போது ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கின்றன. குறிப்பாக தற்போதுள்ள 1, 1 ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்களுக்கு பதிலாக கூடுதலாக 2 பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் ரயில்களை நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்ெகாள்வதற்கான ஸ்டேப்ளிங் லைன்களும் கூடுதலாக அமைக்கப்பட உள்ளன. கழிவறைகள், மேற்கூரைகள் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடக்கின்றன.

ஆனால் இந்த பணிகள் அனைத்தும் மந்த கதியில் நடந்து வருகிறது. கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணிக்காக ரயில் நிலையத்தில் வேகமாக தொடங்கிய பணிகள் தற்போது கிடப்பில் கிடக்கின்றன. இதனால் ரயில்களை உள் வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் வருவதற்கு ரயில்கள் 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ரயில் நிலைய விரிவாக்க பணிகளின் ஒரு கட்டமாக வாகன பார்க்கிங் பகுதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 1 ஏ பிளாட்பாரத்தின் இடதுபுறத்தில் இருந்த ரயில்வேக்கு சொந்தமான காலி இடம் புனரமைக்கப்பட்டு தற்போது பாரக்கிங்காக மாற்றி உள்ளனர். கிட்டத்தட்ட 1000 பைக்குகள் வரை நிறுத்தும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாகன பார்க்கிங் மேற்கூரை இல்லாமல் திறந்த வெளி பார்க்கிங் வசதி கொண்டதாக உள்ளன.

இதனால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வாகனங்கள் சேதம் அடையும் நிலை உள்ளன. மழை சமயங்களில் பைக்குகளை நிறுத்தி விட்டு செல்பவர்கள், 2, 3 நாட்கள் கழித்து வந்து எடுக்கும் போது பைக், ஸ்டார்ட் ஆவதில் பெரும் பிரச்சினை உள்ளது. மேலும் வாகனம் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. திறந்த நிலை பார்க்கிங் கொண்டதாக இருந்தாலும் கட்டணம் வசூலிப்பு குறைய வில்லை. 8 மணி முதல் 24 ணி நேரத்துக்கு பைக்கிற்கு 20 ரூபாயும், கார்களுக்கு ரூ.60ம் கட்டணமாக வசூலிக்கிறார்கள். 24 மணி நேரத்தில் இருந்து 34 மணி நேரம் வரை பைக்குகளுக்கு ரூ.30ம், கார்களுக்கு 100ம் வசூலிக்கப்படுகிறது. 36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரம் வரை பைக்குகளுக்கு ரூ.50ம், கார்களுக்கு ரூ.150ம் வசூலிக்கிறார்கள். 48 மணி நேரத்தில் இருந்து 60 மணி நேரத்துக்கு பைக்குகளுக்கு ரூ.75ம், கார்களுக்கு ரூ.200ம் வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலும் வெளியூர்களுக்கு செல்பவர்கள் 48 மணி நேரம், 60 மணி நேரம் வரை ஆகும் என்பதால், அதற்கான கட்டணத்தை கொடுக்கிறார்கள். ஆனால் இவ்வளவு கட்டணம் கொடுத்தும் கூட, வாகன பார்க்கிங் வசதி முறையாக இல்லை என்று பயணிகள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். இதே நிலை தான் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலும் உள்ளது. வாகனங்கள் நிறுத்த மேற்கூரை வசதியுடன் ஏற்பாடு செய்ய வேண்டும். பைக்குகள் நீண்ட நேரம் மழையில் நிற்பது வாகனத்தை பழுதாகி விடுகிறது. எனவே உடனடியாக ரயில்வே நிர்வாகம் பார்க்கிங் பகுதியில் மேற்கூரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, தற்போதைய டெண்டர் காலம் முடிவடைய உள்ளது. விரைவில் மேற்கூரை வசதி செய்யப்படும் என்றனர்.

மல்டி லெவல் பார்க்கிங் அமையுமா?
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையமாக இருப்பதுடன், அதிகளவில் பயணிகள் வருவதால், இங்கு வாகன நெருக்கடியை தீர்க்கும் வகையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் பட்டியலில் மல்டி லெவல் பார்க்கிங் திட்டமும் உள்ளது. இவ்வாறு அமையும் பட்சத்தில் கார்கள், பைக்குகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தம் வகையில் வசதிகள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

The post மழை, வெயிலில் நீண்ட நேரம் நிற்பதால் பழுதாகும் பைக்; நாகர்கோவில் ரயில் நிலையத்தில் திறந்த நிலை வாகன பார்க்கிங்: பயணிகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Thiruvananthapuram Castle ,Nagarko Train Station ,
× RELATED ரயிலில் மலர்ந்த காதல் ; 2வது...