×

தெளிவு பெறுவோம்

மகாபாரதத்தில் பகவத் கீதைதான் சிறந்த பகுதி என்கிறார்களே?
– சிவா, தாம்பரம்.

உண்மைதான். ஆனால், பகவத் கீதையோடு “விஷ்ணு சகஸ்ரநாமம் யட்ஷ பிரச்னம்’’, “விதுர நீதி’’ போன்ற பல பகுதிகளும். நாம் அவசியம் படிக்க வேண்டிய சிறந்த பகுதிகள் தான். இன்னும் சொல்லப் போனால், மோட்ச தர்மம் என்ற ஒரு பகுதி உண்டு. அதிலே இல்லாத தர்ம சாஸ்திர விஷயங்களே கிடையாது. இப்பொழுது விதுரநீதியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துளி சொல்கிறேன். ஒருவன் முன்னேறுவதற்கு தடையாக ஆறு குணங்கள் இருப்பதாக விதுரநீதி சொல்கிறது. அளவுக்கு விஞ்சிய தூக்கம், அறிவுமயக்கம், தேவையற்ற பயம், ஆத்திரம், சோம்பல், எதையும் தாமதமாகச் செய்தல் என இந்த ஆறு குணங்களும் முன்னேற்றத்திற்கு எதிரிகள் என்று அழுத்தமாகச் சொல்கிறது. இப்படி பல விஷயங்கள் விதிரநீதியில் இருக்கின்றன. இவை படித்தால், நம் வாழ்வு முன்னேறும். அறிவுத் தெளிவு ஏற்படும்.

?சுபகாரியங்களில் என்னென்ன சமயத்தில் என்னென்ன ராகங்கள் வாசிக்க வேண்டும் என்று முறை இருக்கிறதா?
– சு.அமிர்தா, திருவேற்காடு.

ஏன் இல்லாமல்? இப்பொழுதும் அதை ஒரு சிலர் அனுசரிக்கிறார்கள். சிலர் அனுசரிப்பதில்லை. மணமக்கள் ஊர்வலம் போகும் சமயத்தில் வாசிக்க வேண்டிய ராகங்கள், “வசந்தா சௌராஷ்டிரம்’’, “சங்கரா பரணம்’’, “கல்யாணி’’. மாப்பிள்ளை அழைப்பு சமயத்தில் வாசிக்க வேண்டிய ராகங்கள். “தோடி காம்போதி கரகரப் பிரியா’’, முகூர்த்தத்திற்கு முன்பு வாசிக்க வேண்டிய ராகங்கள், “தன்யாசி’’, “நாராயணி’’, “கானடா’’ மாங்கல்யதாரணம் சமயத்தில் வாசிக்க வேண்டிய ராகங்கள், “ஆனந்த பைரவி’’, “கல்யாணி’’, “தன்யாசி’’. இந்த ராகங்கள் சூழ்நிலைகளின் வர்ணங்களை (mood of the situation) பிரதிபலிப்பவை.

அதை அறிந்து வாசிக்க வேண்டும். இன்னின்ன காலத்துக்கு இன்னராகத்தையும் வாசிக்க சொல்லி இருக்கிறார்கள். காலையில் “பூபாளம்’’, “சௌராஷ்டிரம் சாவேரி’’. “இந்தோளம்’’, “தேவ காந்தாரி’’ ராகங்களை வாசிக்க வேண்டும். பகல் நேரங்களில் “காபி’’, “சங்கராபுராணம் சாரங்க’’ இவற்றை வாசிக்கலாம். இராக்காலங்களில் “நீலாம்பரி’’, “காம்போதி’’, “மோகனம்’’, “ஆகிரி’’ போன்ற ராகங்களை வாசிக்கலாம். உதாரணமாக பூபாளத்தைக் கேட்கும் பொழுது உங்களுக்கு காலை நேரத்தின் காட்சிகள் மனதில் வந்துவிடும். வாழ்வில் ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து ரசித்து அனுபவித்து அனுபவித்துச் செய்து இருக்கிறார்கள்.

?எது உண்மையான அறிவு?
– புருஷோத்தமன், ஈரோடு.

இதற்கு திருவள்ளுவர் அருமையான பதிலைச் சொல்லுகின்றார்;
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.

உண்மையை நோக்கிச் செல்வதுதான் அறிவின் நோக்கம். எது நேர்மையான பாதையைக் காட்டுகின்றதோ, அதுவே உண்மையான அறிவு. (நன்றின் பால்
உய்ப்பது அறிவு)

?நாட்டில் வறுமை இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. இப்படி பல பிரச்னைகள் இருக்கிறதே இதற்கெல்லாம் ஆன்மிகம் தீர்வு சொல்லுமா?
– சதீஷ்பாலாஜி, திருச்சி.

ஆன்மிகம்தான் தீர்வு சொல்லும். ஆன்மிகம் என்பது இறந்த பிறகு வாழும் வாழ்க்கையைப் பற்றி என்றே பலரும் கருதி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது வாழும் போதே ஒழுக்கமான, அன்பான, பிறருக்கு உபயோகமான வாழ்க்கையைச் சொல்லித் தருவது என்பதை மறந்து விடுகின்றார்கள். விவேகானந்தர் இது குறித்து மிக அருமையாகச் சொல்லுவார். ரத்தம் புஷ்டியாகவும், தூய்மையாகவும் இருக்குமானால், நோய்க் கிருமிகள் எதுவும் அந்த உடம்பில் வாழ முடியாது.

நமது உயிர் மூச்சு ஆன்மிகம். அது தெளிவாக, உறுதியாக, தூய்மையாக உத்வேகத்துடன் ஓடுமானால், எல்லாம் சரியாக இருக்கும். அரசியல், சமுதாயம் மற்ற பொருளாதார குறைபாடுகள் எல்லாம் சீராக்கப்பட்டுவிடும். ஏன் நாட்டின் வறுமைகூட தீர்க்கப்பட்டுவிடும் என்றார். விவேகானந்தரை நாம் படிப்பதில்லை. படித்தாலும் அந்த விஷயங்களைப் பின்பற்றுவதில்லை.

?பிராணயாமம் என்பது என்ன?
– மு.சந்திரபோஸ், எழும்பூர்.

பிராணயாமம் என்பது பிராணன், அபானன் என்ற இரு வாயுக்களையும் சுவாசித்தினால் இணைப்பது. அப்படி இணைத்துச் செல்லும் பிராணமான வாயுவானது பின் கழுத்துக்கு கீழே உள்ள நாடி வழியாக செல்லுகிறது. புத்தி, உடல் இரண்டையும் நன்கு செயல்பட வைக்கிறது. இதை கட்டுப்பாட்டில் வைத்து மூச்சுப் பயிற்சி செய்தோம் என்றால், பிராண சக்தியை சரிவரப் பயன்படுத்தும் ரகசியம் புரிந்துவிடும். மனம் தெளிவாகும். மனம் தெளிவாக இருக்கும் பொழுது தியானம் வசப்படும். எனவேதான் ஆன்மிகத்தின் ஒரு பகுதியாக யோகமாகிய பிராணயாமத்தைப் பற்றி சொல்லுகிறார்கள்.

?எதற்கு மனத் துணிவு வேண்டும்?
– சக்ரவர்த்தி, ரேணிகுண்டா.

பிறரை அடக்குவதும் மற்றவர்களை ஜெயிப்பதும், பிறர் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதும் மனத்துணிவு என்று நாம் சொல்கிறோம். “என்ன துணிச்சலாகப் பேசுகிறான் பார்’’ என்று பாராட்டுகிறோம். ஆனால், உண்மையில் அதுவல்ல மனத் துணிவு. நம் தவறுகளை நாமே உணர்ந்து ஒத்துக் கொள்வதற்கு பெயர்தான் மனத்துணிவு. மற்றவர்களைக் கேள்வி கேட்பதைவிட தன் தவறை ஏற்றுக் கொள்வதற்கு அதிகமான துணிச்சல் தேவைப்படும்.

?எத்தனையோ நற்பண்புகள் இருந்தாலும், ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருந்தால், அவனை இகழ்கிறார்களே?
– எஸ்.பிரகாசம், தண்டையார்பேட்டை.

நம்மிடத்தில் உள்ள தீய பழக்கங்களை அது ஒரே ஒரு தீய பழக்கமாக இருந்தாலும், அதை நீக்கிக்கொள்ள வேண்டும். காரணம், நூறு நல்ல பழங்களில் ஒரே ஒரு அழுகிய பழம் வைத்துவிட்டால் அது 100 நல்ல பழங்களையும் அழுகிய பழங்களாக மாற்றிவிடும் அல்லவா! நூறு நல்ல பழக்கங்கள் இருந்தாலும், ஒரு கெட்ட பழக்கம் இருந்தால், கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நல்ல பழக்கங்களையும் கெட்ட பழக்கங்களாக மாற்றிவிடும் என்பதால் கவனம் தேவை.

?ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை இருக்கிறது, கவலை இல்லாமல் வாழ முடியாதா?
– வெ.இலக்கியா, மதுரை.

கவலை என்கிற சொல்லின் ஆழத்தைப் புரிந்து கொண்டால், நாம் அதை வெல்வது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். கவலையில் இருக்கக்கூடிய எழுத்துக்கள் மூன்று. இதை க+வலை என்று பிரிக்கலாம்.

1) இதுல, க என்பது ஒன்று என்ற எண்ணைக் குறிக்கும். ஏதாவது ஒரு வலை நம்மை மாட்டி வைத்து கவலையாக மாற்றும்.

2) க என்பதற்கு பிரம்மன் என்று பொருள். பிரம்மனுடைய வலை அதாவது, நம்முடைய வினைகளின் பிரகாரம் நமக்கு கவலைகள் பிரச்னைகள் வருகின்றன என்று பொருள்.

3) மூன்றாவதாக, க என்பதற்கு உடல் என்ற பொருள் உண்டு. இந்த உடல் இருக்கிற வரை, கவலைகள் இருக்கும்.

4) நான்காவதாக, க என்கிற எழுத்துக்கு காற்று என்ற பொருள் உண்டு. காற்று எப்படி எங்கெங்கும் பரந்து இருக்கிறதோ, அதைப் போல கவலைகளும் எங்கெங்கும் வலை விரித்து இருக்கின்றன.

இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று சொன்னால், நாம் கவலை என்கிற சொல்லில் உள்ள நடு எழுத்தான வ என்கிற எழுத்தை நீக்கிக் கொள்ள வேண்டும் அப்படி நீக்கிக் கொண்டால் அது “கலை” யாக மாறும். கலை என்பதற்கு வேதம் சாஸ்திரம் என்று பொருள். வேதத்தையும் சாஸ்திரத்தையும் உணர்ந்தால், நாம் எதைப் பற்றியும் கவலைப் படாமல் வாழ முடியும்.

பொதுவாக, கவலையிலிருந்து தப்பிக்க நம்முடைய கவலையை பகவானிடத்திலே கொடுத்துவிட்டு அவன் பார்த்துக் கொள்வான் என்று கவலையற்று இருப்பதுதான் ஒரே வழி. இதை ஒரு அழகான பாடல் சொல்லும். “எனக்கென்ன மனக்கவலை, என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை’’. கவலைகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று கர்மா விரித்த லோகாயதமான வலை அதில், தான் அகப்பட்டு திணறிக் கொண்டிருக்கிறோம். வேறு வலை என்பது பகவான் என்கிற வலை. இந்த வலையில் அவசியம் விழவேண்டும். இதைத்தான் ஆழ்வார் வாசுதேவன் வலையுள் அகப்பட்டேனே என்கிறார். அந்த பகவான் வலையில் அகப்பட்டு விட்டால் நம்முடைய கவலையிலிருந்து அவன் காப்பாற்றுவான்.

?ஒருவருக்கு செல்வம் சேரச் சேர செல்வாக்கும் மதிப்பும் கூடிக் கொண்டே போகிறது, என்பதால் செல்வம் சேர்ப்பது வாழ்வின் பிரதான நோக்கமா?
– ஹரிஹரசுதன், மடிப்பாக்கம்.

செல்வம் சேரச் சேர செல்வாக்கும் மதிப்பும் கூடிக் கொண்டே போகிறது என்பது உண்மைதான். ஆனால், அந்த உண்மைக்குள் ஒரு உண்மை இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கோடீஸ்வரராக இருந்தால், உங்களை பலரும் மதிப்பார்கள். அது உங்களுக்கான மதிப்பு என்று நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அது உங்களிடம் உள்ள பணத்திற்கான மதிப்பு. ஒருக்கால், அந்தப் பணத்தை நீங்கள் இழந்து விடுவீர்கள் என்று சொன்னால், அதற்குப் பிறகு உங்களை சீண்டக் கூட ஆள் இருக்க மாட்டார்கள். அதனால் செல்வத்தின் அடிப்படையில் பெருமிதப்பட்டுக் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை அது ஒரு போலியான பாராட்டு. மாயை.

இந்தக் கதையைக் கேட்டால் உங்களுக்கு ஓரளவு உண்மை புரியும். ஒரு கழுதை முதுகில் தங்கக் கட்டியைச் சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இன்னொரு கழுதை சாதாரண அழுக்குத் துணிகளைச் சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தது. தங்கக் கட்டியைச் சுமந்த கழுதை அழுக்குத் துணி சுமந்த கழுதையைப் பார்த்து ‘‘இதென்ன கேவலமான வேலை எப்பொழுது பார்த்தாலும் அழுக்கு துணியைத் தூக்கிக் கொண்டு?

இதோ பார், நான் விலைமதிப்புள்ள தங்கக் கட்டியைச் சுமந்து கொண்டு செல்லுகின்றேன். என்னுடைய மதிப்பு தனி’’ என்று பேசியதாம். சற்று நேரத்தில் ஒரு திருட்டுக் கூட்டம் வந்தது. அழுக்குத் துணி சுமந்த கழுதையை விட்டுவிட்டு தங்கக் கட்டி சுமந்த கழுதையை அடி அடி என்று அடித்துத் காயப்படுத்தி விட்டு, தங்கத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்களாம். உயிருக்கு போராடும் ஈனஸ்வரத்தில் “நான் சுமந்த தங்கமே என் உயிருக்கு ஆபத்தாகி விட்டதே” என்று அந்தக் கழுதை முனகியதாம். இது இன்றைய வாழ்வியலுக்கு பொருந்துமா என்று நீங்கள் கேட்கலாம். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பத்திரிக்கையில் வருகின்ற கொலைச் செய்திகளின் பின்னணியைப் பாருங்கள். அங்கே ஆளைக் கொன்றது பகை அல்ல. பணம்.

?ஒரு செயல் தோல்வியில் முடிந்தால் என்ன செய்வது?
– கிருதிக்ஷா, சென்னை.

தோல்வி என்று ஏன் நினைத்துக் கொள்கிறீர்கள், அது வெற்றிக்கான பயிற்சி என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரே முயற்சியில் வெற்றி அடைந்தவர்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள். நமக்கு வெற்றியாளர்களை எப்போது தெரியும்? அவர்கள் வெற்றி பெற்ற பிறகுதான் அவர்களைப் பற்றிப் பெரும்பாலும் தெரியும். ஆனால், அதற்கு முன்னால் அவர்களைப் பற்றிய கதையை கேட்டால்தான் அவருடைய முயற்சிகளும் தோல்விகளும் நமக்குப் புரியும். தோல்வி அடையும் பொழுது பயிற்சி கிடைக்கும். பயிற்சியின் முதிர்ச்சியில் வெற்றி கிடைக்கும் எனவே தோல்வி குறித்து கவலை வேண்டாம். அதுதான் வெற்றிக்கான பாதையைக் காட்டுகிறது.

?ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எது முக்கியம்?
– மோகனபிரியா, விழுப்புரம்.

உங்களுக்கு ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிஞரைப் பற்றி தெரிந்திருக்கலாம். அவர் சாகும் வரை ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார். காலுக்கு கீழே எந்த செயல்பாடும் இல்லாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டுதான் செயல்பட்டார். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?”அவர் சற்றும் தயங்காமல் பதில் சொன்னார்.

“ஏன் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. நிறைவாகவும் இருக்கிறது”. கேள்வி கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை. கால் கைகள் நன்றாக உள்ளவனே கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, தினசரி தன்னுடைய உடல் குறையோடு போராடிக் கொண்டிருக்கும் இவர், வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கும் என்ற குழப்பம் அவருக்கு வந்தது.
அதைப் புரிந்து கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் அவரிடம் சொன்னார்.

‘‘எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்’’ என்று புன்னகையுடன் சொன்னார். யோசித்துப் பாருங்கள். நம்மிடத்திலே 100 பொருள் இருந்தாலும் இல்லாத ஒரே ஒரு பொருளுக்காக 100 பொருள் மூலம் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை நாள்தோறும் தொலைத்து கொண்டிருக்கிறோம். பிறகு எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்வது?

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறுவோம் appeared first on Dinakaran.

Tags : Shiva ,Tambaram ,
× RELATED சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?