×

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு செலவு செய்துள்ள ரூ.18,564 கோடியில் ஒன்றிய அரசின் பங்களிப்பை வழங்க வேண்டும்: ஒன்றிய நிதியமைச்சருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2க்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள செலவு ரூ.18,564 கோடியை ஒன்றிய அரசு, உரிய நிதி பங்களிப்பினை வழங்கிட வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: கோவையில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை மெட்ரோ ரயில்-II திட்டத்திற்கு ரூ.21,000 கோடி கடனுதவியை ஒன்றிய அரசு பெற்றுத் தந்தது, அதில் ரூ.5,880 கோடி மட்டுமே தமிழ்நாடு அரசு செலவு மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை. மெட்ரோ ரயில் இத்திட்டத்தின் 2-வது கட்டம் ஏப்ரல் 2017-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக 3 வழித்தடங்களுடன் 119 கி.மீ. நீளத்திலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஒரு விரிவான திட்ட அறிக்கையை மாநில மற்றும் ஒன்றிய அரசின் 50:50 என்ற சமபங்களிப்பு அடிப்படையில் ஜனவரி 2019-ல் பரிந்துரை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகளின் அளவுகோலுக்கான அறிக்கையின் அடிப்படையில் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் கட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஒன்றிய நிதியமைச்சர் சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-II, மாநில பிரிவு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த சரியான விவரத்தை அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 2017ம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு ஒன்றிய திட்டமாகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் ஜப்பான் நாட்டின் நிதி வழங்கும் ஜெஐசிஏ நிறுவனம் 2018ம் ஆண்டு இத்திட்டத்தினை விரைந்து துவக்க கடன் ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில், காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசே இம்மாபெரும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது. ஒன்றிய நிதி அமைச்சரை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றிய அரசின் பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்தபடி சென்னை மெட்ரோ ரயிலின் 2-வது கட்ட திட்டத்தினை, ஒன்றிய அரசின் பங்களிப்பு திட்டமாக அங்கீகரித்து ஒன்றிய அரசின் பங்கான ரூ.7,425 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதேயாகும். உண்மையில் இதுவரை இத்திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடியாகும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடியாகும். ஆனால் ஒன்றிய அரசின் பங்கான பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கான ரூ.7,425 கோடியில் ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதை இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது ஒன்றிய நிதியமைச்சர் இந்தியாவில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேசும்போது கொச்சி, சென்னை, பெங்களூர், நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய 5 நகரங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பின்பு பெங்களுருக்கு ரூ.30,399 கோடி, கொச்சி நகரத்திற்கு ரூ.1957 கோடி, நாக்பூர் நகரத்திற்கு ரூ.6708 கோடி, பூனே நகரத்திற்கு ரூ.910 கோடி, தானே நகரத்திற்கு ரூ.12,200 கோடி மதிப்பீடு கொண்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு பங்களிப்பு திட்ட அடிப்படையிலேயே ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை சென்னைக்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் ஒன்றிய அரசு செய்யவில்லை. தமிழ்நாடு ஏன் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறது? அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை தொய்வுப்படுத்தவும், மாநில அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்படுகிறதோ என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கைளை ஏற்று ஏற்கனவே பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளபடி தனது பங்கான ரூ.7,425 கோடியை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு செலவு செய்துள்ள ரூ.18,564 கோடியில் ஒன்றிய அரசின் பங்களிப்பை வழங்க வேண்டும்: ஒன்றிய நிதியமைச்சருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Minister Thangam ,Southern Government ,Union ,Finance Minister ,Chennai ,Tamil Nadu ,Minister ,Finance ,Resource ,Management ,Tangam ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Thangam ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளில் தமிழாசிரியர் பணிக்கு...