சென்னை: மயிலாப்பூரில் வசித்து வரும் கூடுவாஞ்சேரி சார் பதிவாளரின் வீட்டிற்கு சென்று ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டில் விடுத்த வழக்கில் போலி பத்திரிக்கையாளர் வராகியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் அடுத்தடுத்த வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர் கூடுவாஞ்சேரி சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். வைத்தியலிங்கம் நேற்று முன்தினம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது: விருகம்பாக்கத்தை சேர்ந்த வராகி(எ)கிருஷ்ணகுமார் என்பவர், தன்னை பத்திரிக்கையாளர் என கூறி கொண்டு சார் பதிவாளர் வைத்தியலிங்தை தொடர்பு கொண்டு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் நிறைய தகவல்களை கேட்டு பெற்றுள்ளேன்.
கூடுவாஞ்சேரி பகுதியில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு உள்ளிட்ட முறைகேடுகளின் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். இதுதொடர்பாக நான் செய்தி வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். பிறகு கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்கே நேரில் வந்தும் வைத்தியலிங்கத்தை மிரட்டினார். எந்த தவறும் செய்யாத நேர்மையான வைத்தியலிங்கம், எதற்கு பயப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இருந்தாலும், வராகி அவரது யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைத்தியலிங்கத்தை பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார். அதற்கும் அவர் உடன் படாததால், சில நாட்களுக்கு முன்பு மயிலாப்பூரில் உள்ள சார் பதிவாளர் வைத்தியலிங்கம் வீட்டிற்கு வராகி தனது கூட்டாளிகளுடன் வந்து, நேரடியாக ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். பணம் கொடுக்கவில்லை என்றால், அனைத்து பத்திரிக்கையிலும் செய்தி வந்துவிடும் என்று மிரட்டியுளளார்.
அப்போது வைத்தியலிங்கம் உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டார். பலமுறை நேரில் சென்று மிரட்டியும் வைத்தியலிங்கம் ரூ.50 லட்சம் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இருந்தாலும், வராகி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அடிக்கடி வாட்ஸ் அப் கால் மூலம் சார் பதிவாளர் வைத்தியலிங்கத்தை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்தார். மேலும், சார் பதிவாளர் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாக செய்திகள் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சார் பதிவாளர் வைத்தியலிங்கம் ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி தனது குடும்பத்தின் நலன் கருதி, வராகி மீது புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். சார் பதிவாளர் வைத்தியலிங்கம் புகாரின் படி, மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சார் பதிவாளர் வைத்தியலிங்கத்தை கூடுவாஞ்சேரிக்கே சென்று சார் பதிவாளர் அலுவலகத்தில் மிரட்டியதும், வீட்டிற்கு வந்து ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. மேலும், இதுபோல் தாம்பரம் சார் பதிவாளர் பாடலிங்கம், சேலையூர் சார் பதிவாளர் மஞ்சு ஆகியோரையும் பல லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதோடு இல்லாமல் தாம்பரம் மாநகர காவல் எல்லையில் ‘ஸ்பா’ நடத்தும் உரிமையாளர் கார்த்திக் என்பவரிடம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக மிரட்டி அவரிடம் ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு பள்ளிக்கரனை போலீசார் வராகியை கைது செய்ததும், விருகம்பாக்கத்தில் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் குடும்பம் நடத்தி பல லட்சம் பணம் பறித்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வராகியை கைது செய்ததும் தெரியவந்தது.
மேலும், வராகி தன்னை பத்திரிக்கையாளர் என்று கூறி கொண்டு போலியான பத்திரிக்கையாளருக்கான அடையாள அட்டையை வைத்து கொண்டு அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் மிரட்டி பணம் பறித்து வந்ததும் விசாரணையின் மூலம் உறுதியானது. அதைதொடர்ந்து மயிலாப்பூர் போலீசார் சிசிடிவி ஆதாரங்கள், செல்போன் கால் லீஸ்ட் உள்ளிட்ட ஆவணங்களின் படி போலி பத்திரிக்கையாளர் வராகி(எ)கிருஷ்ணமூர்த்தி மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல், அத்து மீறி நுழைதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் (66டி) உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போலி பத்திரிக்கையாளர் வராகி நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 27ம் ேததி வரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
போலி பத்திரிக்கையாளர் வராகி கைதான சம்பவம் ெவளியானதை தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பல இடங்களில் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் போலி பத்திரிக்கையாளர் வராகியை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post கூடுவாஞ்சேரி சார் பதிவாளரை வீடு புகுந்து ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்; சென்னையில் போலி பத்திரிகையாளர் வராகி கைது: மயிலாப்பூர் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.