×

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் காஞ்சிபுரம் ஏஜென்ட் கைது

காஞ்சிபுரம்: வந்தவாசியில் 83 சவரன், ₹48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏஜென்ட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் அருண் என்கின்ற அருணாச்சலம்(50). இவரது பங்களா வீட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த 15ம் தேதி போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணினி மூலமாக ஆன்லைன் சூதாட்டம் நடத்திய அருணாச்சலத்தை கைது செய்து அவரிடமிருந்து 83 சவரன் தங்க நகை, ₹48.50 லட்சம், 9 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், அருணாச்சலம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சையத் இப்ராஹிம்(44) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ₹30 ஆயிரம், 2 செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், நேற்று அருணாச்சலத்தை சந்திக்க வந்தவாசி பழைய பஸ் நிலையம் வந்த காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த நாகராஜன்(44) என்பவரை, டிஎஸ்பி கங்காதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமு, முருகன் மற்றும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில் சைக்கிள் கடை தொழிலாளியான நாகராஜன் காஞ்சிபுரம் பகுதியில் ஆன்லைன் சூதாட்ட ஏஜென்டாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து, வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட முகவர்களுடன் செயல்படும் ஆன்லைன் சூதாட்ட கும்பல்களை சேர்ந்தவர்கள் அருணாச்சலம் செல்போன் எண்ணில் அதிக தொடர்புடையவர்களை கண்டறிந்து விசாரணை வளையத்தில் கொண்டு வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post ஆன்லைன் சூதாட்ட வழக்கில் காஞ்சிபுரம் ஏஜென்ட் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Vandavasi ,Arunachalam ,Arun ,Potti Naidu Street, Vandavasi Town, Tiruvannamalai District ,Dinakaran ,
× RELATED சவுண்ட் சர்வீஸ் தொழிலாளி நாக்கை...