×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்: எய்ம்சுக்கு உடல் தானமாக வழங்கப்படுகிறது, பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. யெச்சூரியின் விருப்பப்படி அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது. அவரது உடலுக்கு பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) நிமோனியா பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஐசியுவில் கடுமையான சுவாச தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் ஆதரவில் இருந்த அவர், நேற்று மாலை 3.03 மணி அளவில் காலமானார். இடதுசாரி இயக்கத்தின் தலைசிறந்த தலைவரும், மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதியுமான சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகப்பெரிய இழப்பு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. யெச்சூரியின் உடல் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கட்சியின் தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என்றும், அதன் பிறகு யெச்சூரியின் விருப்பப்படி அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுவதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய யெச்சூரி, இந்திய மாணவர் கூட்டமைப்பில் (எஸ்எப்ஐ) உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகிய அவர், கடந்த 1992ல் பொலிட்பீரோ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2005 முதல் 2017ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பியாக இருந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த 21வது கட்சி மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் 5வது பொதுச் செயலாளராகி, பிரகாஷ் காரத்திடம் இருந்து பொறுப்பை பெற்றார். 2018ல் 2வது முறையாகவும், 2022ல் 3வது முறையாகவும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு முழுவதும் எதிரணிகளை ஒன்று திரட்டி அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி அமைவதில் முக்கிய பங்காற்றினார்.

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் அரசியல் வழிகாட்டிகளில் ஒருவராக இருந்தார்.  இடதுசாரிகளின் முகமாக அறியப்பட்ட யெச்சூரியின் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலில் இந்திராணி மஜும்தாரை மணந்த யெச்சூரி, அவரிடமிருந்து பிரிந்த பிறகு பத்திரிகையாளர் சீமா சிஸ்தியை திருமணம் செய்து கொண்டார். இந்திராணி மஜும்தாருக்கு2 குழந்தைகள் உள்ளனர். யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி தனது 34வயதில் ஏப்ரல் 2021ல் கொரோனா தொற்றால் காலமானார். அவரது மகள் அகிலா யெச்சூரி இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

* தலைவர்கள் இரங்கல்
ஜனாதிபதி முர்மு தனது இரங்கல் செய்தியில், ‘உறுதியான சித்தாந்தவாதியான யெச்சூரி, கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை கொண்டிருப்பவர். அவரது மறைவு குறித்து அறிந்து வருத்தமடைந்தேன். மாணவர் தலைவராகவும், தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்தன்மை வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். அவரது குடும்பத்தினருக்கும் சக கட்சியினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறி உள்ளார்.

பிரதமர் மோடியின் இரங்கல் செய்தியில், ‘சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் முன்னணி ஒளியாக இருந்தார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் முத்திரை பதித்துள்ளார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. ஓம் சாந்தி’ என கூறி உள்ளார்.

ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில், ‘யெச்சூரி எனது நண்பர். நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலுடன் இந்தியா கூட்டணியின் பாதுகாவலராக இருந்தவர். நாங்கள் நடத்திய நீண்ட விவாதங்களை நான் இழக்கிறேன். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என கூறி உள்ளார்.

* சென்னையில் பிறந்தவர்
சீதாராம் யெச்சூரி 1952ம் ஆண்டு, ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் பிறந்தார். ஐதராபாத்தில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். டெல்லி சென்று, பிரசிடெண்ட் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்தார். அங்கு சிபிஎஸ்இ தேர்வில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்தார். பின்னர், செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்: எய்ம்சுக்கு உடல் தானமாக வழங்கப்படுகிறது, பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Marxist ,Communist General Secretary ,Sitaram Yechuri ,AIIMS ,NEW DELHI ,GENERAL SECRETARY ,MARXIST COMMUNIST PARTY ,PHYSICAL ,MALAISE ,Aims Hospital ,Yechuri ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நியமனம்