×

10 ஆண்டுகளுக்கு பின் பேரவை தேர்தல் ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து ஜம்முவில் உள்ள 43 தொகுதிகள் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 47 தொகுதிகள் என மொத்தமுள்ள 90 பேரவை தொகுதிகளுக்கு இன்றும், வரும் 25ம் தேதி மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜ, காங்கிரசில் இருந்து விலகி ஒன்றிய முன்னாள் அமைச்சர் குலாம் நபி ஆசாத் தொடங்கிய ஜனநாயக ஆசாத் முன்னேற்ற கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

அத்துடன் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஜேகேஎன்பிபி ஆகிய கட்சிகள் கூடடணி வைத்து களம் காண்கின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 24 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி ஜம்முவின் 3 மாவட்டங்களில் 8 தொகுதிகளிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கின் 4 மாவட்டங்களின் 16 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, 11,76,462 ஆண் வாக்காளர்கள், 11,51,058 பெண் வாக்காளர்கள் மற்றும் 60 3ம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 23,27,580 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 12,974 கிராமப்புற வாக்குச்சாவடிகள், 302 நகர்ப்புற வாக்குச்சாவடிகள் என மொத்தமுள்ள 3,276 வாக்குச்சாவடிகளில் 14,000 வாக்குச்சாவடி ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள வாக்குப்பதிவை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்காக மத்திய ஆயுதப்படை, துணை ராணுவப்படை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

The post 10 ஆண்டுகளுக்கு பின் பேரவை தேர்தல் ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Jammu ,Kashmir Valley ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை