×

ஞானப்பல்… ஒரு பார்வை!

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்கத் தொடங்கும். முதலில் தோன்றுபவை பால் பற்கள்; அவை விழுந்த பிறகே நிரந்தரமான பற்கள் முளைக்கும். 13 வயதுக்குள் மொத்தம் 28 பற்கள் முளைத்துவிடும். மீதமுள்ள நான்கு பற்கள் 17 வயதுக்கு மேல் முளைக்கும். அவைதான், `ஞானப்பற்கள்’ (Wisdom Teeth) என அழைக்கப்படுகின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து, சற்று வளர்ந்து பக்குவமான நிலையிலும், அறிவுத்திறனுடன் இருக்கும் நிலையிலும் இவை முளைப்பதால், ‘ஞானப்பல்’ என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

எது ஞானப்பல்?

வாயிலிருக்கும் மொத்தப் பற்களின் எண்ணிக்கை 32. பற்களின் மேல் வரிசையிலும், கீழ் வரிசையிலும் இடதுபுறம் மூன்று, வலதுபுறம் மூன்று என மொத்தம் 12 கடைவாய்ப்பற்கள் இருக்கும். கடைவாய்ப்பற்களின் வரிசையில் கடைசியிலிருக்கும் பல்லே ஞானப்பல். பற்களின் மேல் வரிசையில் இரண்டு, கீழ் வரிசையில் இரண்டு என மொத்தம் நான்கு ஞானப்பற்கள் இருக்கும்.

எப்போது முளைக்கும்?

17 வயதிலிருந்து 23 வயதுக்குள் முளைக்கும். தாடை மிகவும் சிறியதாக இருப்பவர்களுக்கு முதல் இரண்டு கடைவாய்ப்பற்கள் இயல்பாக முளைத்து
விடும். மூன்றாவது கடை வாய்ப்பல்லான ஞானப்பல் முளைக்க இடம் இருக்காது. அதனால், அது எலும்புக்குள்ளேயே இருந்துவிடும். எலும்புக்குள் பல் இருக்கும் நிலை ‘இம்பாக்‌ஷன்’ (Impaction) என்று கூறப்படுகிறது. சிலருக்கு முதல் கடைவாய்ப்பல் சரியாக முளைத்துவிடும். இரண்டாவது கடைவாய்ப்பல்லை இடித்துக்கொண்டு ஞானப்பல்
முளைக்கும்.

என்னென்ன பாதிப்புகள்?

ஞானப்பல் முளைக்கும்போது எல்லோருக்கும் பிரச்னை ஏற்படாது. ஆனால், பிரச்னை ஏற்பட்டால், அவசியம் பல்லை அகற்ற வேண்டும். சிலருக்கு வீக்கம், வாய் திறக்க முடியாத அளவுக்கு வலி, கெட்ட நாற்றம், சரியாக முளைக்காமல் மேல் தாடையை இடித்துக் கொண்டு இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும். வலி, வீக்கம் இருக்கும் நிலையில் பல்லை எடுப்பது மிகவும் சிரமம். நோயாளிகள் நன்றாக ஒத்துழைப்பு அளித்தால்தான், எளிதாகப் பல்லை அகற்ற முடியும். அதனால், ஆன்டிபயாடிக் மருந்துகள், வாயைத் திறப்பதற்கு பயிற்சிகள் கொடுத்து பல்லை அகற்றுவார்கள்.

ஞானப்பல் நல்லதா?

ஞானப்பல் முழுவதுமாக எலும்பின் உள்ளே இருந்தால், முன்னாலிருக்கும் பல்லின் வேரை இடித்துக்கொண்டு இருக்கும். அரைகுறையாக முளைத்திருந்தால், முன்னாலிருக்கும் பல்லின் மீது சாய்ந்ததுபோல இருக்கும். அந்த நிலையில் முன்னாலிருக்கும் இரண்டாவது கடைவாய்ப்பல்லைக் காப்பாற்றுவதற்காக ஞானப்பல்லை அகற்ற வேண்டும். சிலருக்கு, பல் முளைக்கவேண்டிய இடத்தில் ஈறு வீங்கியிருக்கும்.

அந்தப் பகுதியில் பல் வெளியே வர இடம் இருக்கிறதென்றால், பல்லுக்கு மேலிருக்கும் ஈறுப் பகுதியை கீறிவிட்டால், பல் தானாக முளைத்துவிடும். பல் முளைக்காமல் எலும்புக்குள்ளேயே இருக்கும்போது மிகவும் அரிதாக சிலருக்கு கட்டியாகவோ, புற்றுநோய்க் கட்டியாகவோ மாற வாய்ப்பிருக்கிறது. பல் முளைக்காமல் எலும்புக்குள்ளேயே இருந்துகொண்டு பிரச்னை கொடுத்தால், அறுவைசிகிச்சை மூலம் பல் இருக்கும் எலும்பை ட்ரிம் செய்து ஞானப்பல்லை அகற்றுவார்கள்.

எப்படிப் பராமரிப்பது?

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்களைப் பரிசோதனை செய்ய வேண்டும். முதன்முறையாகப் பல் பரிசோதனைக்குச் சென்றால், ஞானப்பல் எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்க வேண்டும்.

ஞானப் பல் நீக்கம்!

ஞானப் பல்லை எடுக்க வேண்டிய தேவை உள்ளவர்களுக்கு உடனடியாக பல்லை எடுத்துவிட மாட்டார்கள். வீக்கம், வலி போன்றவற்றுக்கு சிகிச்சை கொடுத்த பின்பு, அந்த இடத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார்கள். அந்தப் பல் என்னவிதமான அமைப்பில் எலும்புக்குள் பொருந்தியிருக்கிறது. மற்ற பல்லோடு அதற்கு உள்ள தொடர்பு ஆகியவற்றை அனுமானித்த பிறகே சரியான சிகிச்சையைத் தருவார்கள்.

இன்று ஞானப் பல்லை நீக்குவது என்பது ஓர் எளிய சிகிச்சைதான். ஆனாலும் சிலருக்கு இதனால் சில வாரங்களுக்கு பக்கவிளைவுகள் இருக்கக்கூடும். இந்த ஞானப்பல்லை எடுக்கும்போது அது கடைவாயில் உள்ள நரம்பு பாதிக்கப்பட்டால் முகம் மரத்துப் போன உணர்வு சிலருக்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை நீடிக்கும். எனவே, நன்கு பரிசோதித்த பிறகே எந்த சிக்கலும் இல்லாத வகையில் பல்லை நீக்குவார்கள். பல் நீக்கத்துக்குப் பிறகும் வருடத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து உரிய பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

தொகுப்பு: லயா

The post ஞானப்பல்… ஒரு பார்வை! appeared first on Dinakaran.

Tags : Gnanappal… ,Kumkum ,Dinakaran ,
× RELATED உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய் சிகிச்சை!