நன்றி குங்குமம் டாக்டர்
மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர்.
எனக்கு 42 வயது. பார்வை சிறிது மங்கலாகத் தெரிந்ததால், கண் பரிசோதனை செய்து பார்த்தேன். ‘பவர்-0.5’ என்று சொன்னார்கள். இதற்கு அவசியம் கண்ணாடி அணிய வேண்டுமா… வாழ்வியல் மாற்றங்கள் உதவாதா?
– கே.ராதாகிருஷ்ணன், சேலம்.
“முறையான மருத்துவப் பரிந்துரைப்படி, பார்வை அளவுகோலில் ‘-0.5’ அல்லது அதற்கு அதிகமான அளவு இருந்தால், எல்லா நேரமும் கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து கண்ணாடி உபயோகிக்கும் சூழல் மாறுபடலாம். உதாரணமாக, மிக அருகிலிருக்கும் பொருட்கள், எழுத்துகள் தெளிவாகத் தெரியவில்லையென்றால் கண்ணாடி உபயோகத்தைத் தவிர்க்கக் கூடாது.
‘புத்தகம் வாசிக்கும்போது மட்டும் சிரமம் இருக்கிறது’ அல்லது ‘டிஜிட்டல் திரைகளின் எழுத்துகளைப் பார்க்கும்போது மட்டும் சிரமம் இருக்கிறது’ என்றால், அப்போது மட்டும் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். ‘குறிப்பிட்ட சூழலில் மட்டும் கண்ணாடி அணிந்து கொண்டால் போதும்’ என அறிவுறுத்தப்படும் பலரும் குறுகிய காலத்திலேயே, ‘கண்ணாடி நமக்குத் தேவையில்லை’ என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் அவசியப்படும் நேரத்திலும்கூட கண்ணாடியைத் தவிர்க்கிறார்கள். இந்தப் பழக்கம் நீடிக்கும்போது பார்வைத்திறனில் பிரச்னை அதிகரித்துவிடும்.
பயன்தரும் வாழ்வியல் மாற்றங்கள்:
கிட்டப்பார்வை பிரச்னை இருக்கும் பலர் பொருட்களை மிக அருகில்வைத்துப் பார்க்கும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். டிஜிட்டல் திரைகளை அதிகமாக உபயோகிப்பவர்களாகவும் இருப்பார்கள். எனவே, இந்தப் பிரச்னை உள்ளவர்கள், தினமும் ஒரு மணி நேரம் கட்டாயம் இயற்கை வெளியில் நேரம் செலவழிக்க வேண்டும். இயற்கையான இடத்தில், தொலைவிலுள்ள பொருட்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது கண்கள் புத்துணர்ச்சியடைந்து சிரமங்கள் ஏற்படாமல் இருக்கும்.’’
‘என்னுடைய இரண்டு காதுகளுக்குப் பின்புறத்திலும் சில நாட்களாகச் சிறிய அளவில் தேமல்போல ஏற்பட்டிருக்கிறது. உடலில் வேறெங்கும் இல்லை. இதற்கு என்ன காரணம்… தீர்வு உண்டா?’
– ரா.பிருந்தா, திருபுவனம்.
“நம் உடலிலுள்ள ஆன்டிபாடிகள் சில ஒன்றோடொன்று இணைந்து மூட்டுகளிலோ, சருமத்திலோ பாதிப்பை ஏற்படுத்தும். இது, `இணைப்புத் திசு பாதிப்பு’ (Connective Tissue Disease) என அழைக்கப்படுகிறது. உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இந்த பாதிப்பாகக்கூட இருக்கலாம். ரத்தப் பரிசோதனை, சில சருமப் பரிசோதனைகள் மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். இது வெண்புள்ளியாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. வெண்புள்ளியாக இருந்தால் பார்த்தவுடன் தெரிந்துவிடும்.
சிவப்பாக, செதில் செதிலாக இருந்தால் ‘செபோரிக் டெர்மடைட்டிஸ்’ (Seborrheic Dermatitis) அல்லது சோரியாசிஸாக இருக்கக்கூடும். இவை மூன்றும் இல்லாதபட்சத்தில் வெறும் தேமலாக இருக்கலாம். அப்படியெனில், சரும மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுச் சரிசெய்துவிடலாம். இது போன்ற பிரச்னைகளுக்கு வீட்டு மருத்துவத்தைத் தவிர்த்துவிட்டு, சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.’
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட எனக்கு, 11 மாதங்கள் ஆகியும் வயிறு குறையவில்லை. அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.
– ரா.பிரியா, சென்னை.
பிரசவத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள், சிகிச்சைக்குப் பிறகு ஆறு வாரங்கள் முதல் மூன்று மாதங்களுக்குள், தசைகளுக்கான உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். உடற்பயிற்சி இல்லாததுதான் வயிற்றுத்தசை பெருக்கக் காரணம். அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் சில பயிற்சிகளைச் செய்வதன் மூலம் அவர்களின் வயிறு பழையநிலைக்குத் திரும்பும். `பெல்விக் பிரிட்ஜிங்’ (Pelvic Bridging): மல்லாக்கப் படுத்துக்கொண்டு, கால்களை மடக்கி, மூட்டுகளைச் செங்குத்தாக வைத்துக்கொள்ளவும். இரு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு இடுப்புப் பகுதியை மட்டும் மெதுவாக மேலே உயர்த்தவும். சில விநாடிகள் கழித்து, பழைய நிலைக்கு வரவும்.
வயிற்றுத் தசைகளுக்கான பயிற்சிகள் (Abdominal Crunches): மல்லாக்கப் படுத்துக்கொண்டு, கால்களைச் செங்குத்தாக மடக்கவும். இரு கைகளையும் மேல் நோக்கி நீட்டியபடி, தலை மற்றும் மார்புப் பகுதியை மட்டும் தரையிலிருந்து சில இன்ச் மேலே உயர்த்தவும். சில விநாடிகள் கழித்து, பழையநிலைக்கு வரவும்.ப்ளாங்க் (Plank): குப்புறப் படுத்துக்கொண்டு, முழங்கையை மடித்து ஊன்றி, கால் விரல்கள் மட்டும் தரையில் படுமாறு வைத்துக்கொண்டு உடலை மேல் நோக்கி உயர்த்தவும். இந்த நிலையில், உடல் நேர்கோட்டில் இருக்கும். மடித்து ஊன்றிய கைகளை, நேராக நிமிர்த்தி ஊன்ற வேண்டும். உடலை இரண்டு நிலைகளுக்கும் தொடர்ச்சியாக உட்படுத்தவும்.
கன்சல்ட்டிங் ரூம்
இவை அனைத்தையும், தினமும் ஐந்து முதல் பத்து முறை பொறுமையாகச் செய்ய வேண்டும். இவற்றோடு, நடைப்பயிற்சி மற்றும் `Lower Body Cycling’ எனப்படும் மிதிவண்டிப் பயிற்சியை நவீன இயந்திரங்கள் உதவியுடன் மேற்கொண்டால் வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகள் குறைய ஆரம்பிக்கும்.
‘எனக்கு 38 வயது. காலையில் மட்டுமல்ல, எந்த நேரம் பல்லை விரலால் தேய்த்தாலும் ரத்தம் வருகிறது. சில நேரங்களில் முகம் கழுவும்போதும், வாய் கொப்புளிக்கும் போதும்கூட ரத்தம் வருகிறது. இதற்கு என்ன காரணம்… எளிய தீர்வு இருந்தால் சொல்லுங்கள்.
– டி.என்.சோமசுந்தரம், பழவநத்தம்.
“பற்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யாவிட்டால், ஈறுகளில் அழற்சி ஏற்பட்டு வலுவிழக்கத் தொடங்கும். இதனால் பல் துலக்கும்போது, சாப்பிடும்போது, விரலால் தேய்க்கும்போது எனப் பற்களுக்கு சிறு அசைவு கொடுத்தாலும் ரத்தம் வரத் தொடங்கிவிடும். இப்படிப்பட்டவர்கள் முறையாக பற்களைச் சுத்தப்படுத்துவது தான் பிரச்னைக்கான தீர்வு. பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
அதிகபட்சம், வருடத்துக்கு ஒரு முறையாவது பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பற்களைச் சுத்தம் செய்த பிறகும் பிரச்னை சரியாகவில்லையென்றால், எக்ஸ்ரே எடுத்து எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பரிசோதிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் பற்களின் வேர்களைச் சுத்தப்படுத்தும் ‘ரூட் பிளானிங்’ (Root Planing) சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.’’
80 வயதான என் கணவருக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்தோம். இப்போது அவருக்குக் கால்கள் வீங்குகின்றன. இது ஏன்? என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்?
– ராஜலட்சுமி, கும்பகோணம்.
ஒரு கால் மட்டும் வீங்கியிருப்பது, அலர்ஜியாக இருக்கலாம். இரண்டு கால்களும் வீங்கியிருந்தால் இதயப் பிரச்னை, சத்துக் குறைபாடு அல்லது சிறுநீரகக் குறைபாடாக இருக்கும். பாதிப்புக்கான காரணியைப் பொறுத்து சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். இதய அறுவைசிகிச்சை செய்தவர் என்பதால், அது தொடர்பான பிரச்னையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதயத்தின் இயங்கு திறன் அல்லது ரத்த நாளங்களின் செயல்திறன் குறைபாடாக இருக்கலாம்.
பைபாஸ் சிகிச்சையின்போது, இதய ரத்த ஓட்டத்தைச் சீராக்க, கால் ரத்தநாளங்களைப் பயன்படுத்துவது வழக்கம். அப்படி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ரத்தநாளத்தில் பாதிப்பு ஏற்பட்டால், காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு கால் வீக்கம் ஏற்படும். வயது முதிர்வு காரணமாகவும் காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் வால்வுகள் செயலிழந்திருக்கலாம். வயதானவர்களுக்கு மட்டுமல்ல, நீண்டநேரம் நிற்பவர்களுக்கும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, இதயநோய் மருத்துவரை அணுகி, இதய இயங்கு திறன் மற்றும் காலிலுள்ள வால்வுகள் குறித்துப் பரிசோதனை செய்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கவும். இதயப் பிரச்னை இல்லையென்றால், ‘சீரம் கிரியாட்டினின்’ (Serum Creatinine) என்ற சிறுநீரகப் பரிசோதனை, ஹீமோகுளோபினுக்கான பரிசோதனை செய்து பார்க்கவேண்டியிருக்கும்.
The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.