×

வருமான வரம்பின்றி 70 வயதுக்கு மேல் அனைவருக்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்; 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள்

புதுடெல்லி: நாட்டில் 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவருக்கும் வருமான வரம்பின்றி மருத்துவ சிகிச்சை அளிக்க புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:
* ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் இணைய எந்தவித வருமான கட்டுப்பாடும் இல்லை. மூத்த குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். இந்த திட்டத்தின் மூலம் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு பெறலாம். இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு புதிய தனி அட்டை வழங்கப்படும்.
* நாடு முழுவதும் 31,350 மெகாவாட் நீர்மின் திட்டங்களுக்கு ரூ.12,461 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 8 ஆண்டுகளில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* மின்சார வாகனங்களை ஊக்குவிக்க ரூ.10,900 கோடி மதிப்பிலான பிஎம் இ டிரைவ் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் 24.79 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள், 14,028 இ-பஸ்கள் ஆகியவை வாங்குவதற்கு நிதிஒதுக்கப்படும். மேலும் மின்சார வாகனங்களை சார்ஜிங் செய்வதற்காக நாடு முழுவதும் 88,500 சார்ஜிங் தளங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மின் திட்டம் மூலம் மின்வாகனங்கள் வாங்குவதற்காக ரூ.3,679 கோடி நிதி மானியமாக வழங்கப்படும். மாநில அரசுகளின் பொது போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் 14,028 இ-பஸ்களை கொள்முதல் செய்ய ரூ.4,391 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இ-ஆம்புலன்ஸ் சேவைக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சார சரக்குலாரிகளை இயக்குவதை ஊக்குவிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2029ம் ஆண்டு வரை 62,500 கிமீ தூரம் சாலைகள் அமைக்க ரூ.70,125 கோடி நிதி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஒன்றிய அரசு நிதி ரூ.49,087.50 கோடி. இவ்வாறு அவர் கூறினார்.

The post வருமான வரம்பின்றி 70 வயதுக்கு மேல் அனைவருக்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்; 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,NEW DELHI ,Union government ,Modi ,Dinakaran ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...