×

என்னடா இது மன்னார்குடிக்காரனுக்கு வந்த சோதனை… அமமுக தலைமை அலுவலகத்தை காலி செய்ய அழுத்தம் தரும் உரிமையாளர்: வேறு இடம் தேடி அலையும் டிடிவி.தினகரன்

சென்னை: அமமுக தலைமை அலுவலகத்தை காலி செய்ய சொல்லி உரிமையாளர் அழுத்தம் கொடுத்து வருவதை தொடர்ந்து, புதிய இடத்துக்கு மாற்றுவதற்காக வேறு இடம் தேடி டிடிவி.தினகரன் அலைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் நடந்த அதிகார மோதல்களை தொடர்ந்து, 2018ல் டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கினார். இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இதே பெயரில் செயல்படுவோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களை சந்தித்த அமமுக பெரும் பின்னடைவையே சந்தித்தது.

கட்டமைப்பு ரீதியாக கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததைவிட, கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது. கட்சி தொடங்கும் போது தினகரனுக்கு பக்க பலமாக நின்ற பலர் இன்று கட்சியில் இல்லை. கட்சி நிர்வாகிகளுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் அவ்வப்போது தினகரன் அமைதியாக சென்றுவிடுவதே அதற்குப் பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது. அதேபோன்று, தேர்தல் காலங்களில் பொருளாதார ரீதியான உதவிகளுக்குத் தலைமையைக் கடைசி வரை எதிர்பார்த்துக் காத்திருப்பதும், பிறகு ஏமாற்றப்படுவதுமாக நிர்வாகிகள் கடுமையான அதிருப்திக்கு தொடர்ச்சியாக ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக யாராவது கட்சியைவிட்டு வெளியேற முடிவெடுத்து, தலைமைக்கு அதைத் தெரியப்படுத்தினாலும், ‘விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் கிளம்புங்கள்’ என்கிற தினகரனின் அணுகுமுறைதான் பலரை முகச்சுளிப்புக்கு ஆளாகியிருக்கிறது என்று அமமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. கட்சி தொடங்கும் போது, அமமுக மாநில அம்மா பேரவை இணைச்செயலாளராக பதவி வகித்து வந்த இசக்கி சுப்பையா, டிடிவி தினகரன் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு உடையவர். டிடிவி தினகரன் முக்கிய ஆலோசனை கூட்டங்கள் அனைத்தும் இவர் இடத்தில் தான் நடப்பது வழக்கம்.

அதன்படி, சென்னை அசோக்நகர் நடேசன் சாலை போலீஸ் பயிற்சி கல்லூரி அருகே உள்ள இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் அமமுக தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், அமமுகவில் இருந்து திடீரென விலகிய இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைந்து விட்டார். இதனால் அவருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த அமமுக தலைமை அலுவலகத்தை காலி செய்யுமாறு கூறினார். இதனால் அங்கிருந்து ராயப்பேட்டைக்கு அமமுக தலைமை அலுவலகம் இடம் பெயர்ந்தது. ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான மிகப் பெரிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த கட்டிடத்தின் உரிமையாளர் பொன் முருகேசன், அமமுக நிர்வாகியாக பதவி வகித்து வந்தார். இதனால் தனது கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் செயல்பட அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதன் திறப்பு விழா மிகவும் தடல்புடலாக அமர்க்களப்படுத்தப்பட்டது. தற்போது அமமுக ஒவ்வொரு தேர்தல்களிலும் பெரிய அளவில் சோபிக்காததால் பலர் தலைமை அலுவலகத்துக்கு வருவதையே தவிர்த்து விட்டனர். இதனால் அமமுக தலைமை அலுவலகம் எப்போதும் களை இழந்தும், அலுவலகம் திறந்து இருக்கிறதா என்ற சந்தேகத்துடன் தான் செயல்பட்டு வந்தது.

கட்டிட உரிமையாளரான பொன் முருகேசனுக்கு தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். அதன் பின்பு அமமுகவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில், அமமுக தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடத்துக்கான வாடகை கொடுப்பதை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், வாடகை பணத்தை அவர் செலுத்தவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்டிடத்தை காலி செய்யுமாறு உரிமையாளர் தரப்பில் இருந்து டிடிவி.தினகரனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியும் டிடிவி.தினகரன் தரப்பில் இருந்து காலி செய்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதனால் உரிமையாளர் தரப்பில் இருந்து கிறிஸ்ட் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான வாகனங்களை கட்டிடத்தை சுற்றிலும் நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் பிரச்னை பெரிதாகிக் கொண்டே போகியுள்ளது.

இதை தொடர்ந்து, மன்னார்குடி உறவினர்கள் மூலம் இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாயத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அமமுக தலைமை அலுவலகத்தை அங்கிருந்து காலி செய்வதற்கு டிடிவி.தினகரன் ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை அலுவலகத்தை காலி செய்ய வேண்டியதிருப்பதால் தற்போது புதிய அலுவலகத்துக்கான கட்டிடத்தை தேடும் படலம் தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அமமுக நிர்வாக இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதை தொடர்சியாக கட்சி நிர்வாகியான பொன் முருகேசனுக்கு சொந்தமான கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

இப்போது அவரும் கட்டிடத்தை காலி செய்ய அழுத்தம் கொடுத்து வருவதால் புதிய இடம் தேடி அமமுகவினர் அலைந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படத்தில், ‘என்னடா இது மதுரகாரனுக்கு வந்த சோதனை’ என்ற வசனம் வரும். அதே மாதிரிதான் இப்போது டிடிவி.தினகரனுக்கும், ‘என்னடா இது மன்னார்குடிக்காரனுக்கு வந்த சோதனை’ என்று அதிமுகவினர் கிண்டலடித்து பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி வருகிறது.

The post என்னடா இது மன்னார்குடிக்காரனுக்கு வந்த சோதனை… அமமுக தலைமை அலுவலகத்தை காலி செய்ய அழுத்தம் தரும் உரிமையாளர்: வேறு இடம் தேடி அலையும் டிடிவி.தினகரன் appeared first on Dinakaran.

Tags : Mannarkutikaran ,Ammuka ,DTV ,DINAKARAN ,Chennai ,Atamug ,Jayalalitha ,Aamuga ,
× RELATED 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு...